Published : 17 Dec 2021 04:28 PM
Last Updated : 17 Dec 2021 04:28 PM
சென்னை: புதுப்பிக்கப்பட்ட தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இல்லக் கட்டிடத்தைப் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அபிராமி சிதம்பரம் சமுதாயக் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் இரு பெரும் விழாவில், பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இல்லக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
மேலும், மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க வலைத்தளத்தையும், இணையவழியில் சங்கத்திற்கு நன்கொடை வழங்கும் வசதியையும் முதன்முதலாகத் தொடங்கி வைத்தார். அத்துடன், ரூ.5,001/-ஐ முதல் நன்கொடையாகப் பொதுப்பணிகள் துறை அமைச்சர் வழங்கி விழாவைச் சிறப்பித்தார்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் பொறிஞர். டி.எஸ்.கே. முதலியார், ராமசாமி ரெட்டி, சந்திரசேகரன் போன்ற பொறியியல் வல்லுநர்களால், 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றளவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க வளாகத்தைச் சில மாதங்களுக்கு முன்னர் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இல்லம் பழைய நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி அதனைப் புதுப்பிக்க ஆலோசனை வழங்கினார். மேலும் அமைச்சரின் ஆலோசனைகளை ஏற்று மூன்றே மாதங்களில் சங்கக் கட்டிடத்தைப் புதுப்பித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பொறியாளர் சங்கத்தினர் அமைச்சரிடம் முன்வைத்த சில கோரிக்கைகளை பின்வருமாறு:
கருணாநிதி பொறியாளர்களுக்கு திருத்திய 6-வது ஊதியக்குழு ஊதியத்தை 2010-ம் ஆண்டு வழங்கினார். பின்னர் அமைந்த அரசு, பொறியாளர்களின் ஊதியத்தைக் குறைத்துவிட்டது. இன்றளவும் குறைந்த ஊதியத்தையே பொறியாளர்கள் அனைவரும் பெற்று வருகின்றனர். கருணாநிதி அறிவித்த ஊதியத்தை மீண்டும் வழங்கி அதன் அடிப்படையில் 7-வது ஊதியக்குழு உயர்வுகளைப் பொறியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையில் பணிச்சுமையினைக் குறைப்பதற்காகவும், பணிகள் தரமாக நடைபெறுவதற்கும், பொதுப்பணித் துறையில் உள்ளது போல், மண்டல வாரியாகத் தலைமைப் பொறியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறையில், முதன்மை இயக்குநர் பதவியின் பெயரை முதன்மை தலைமைப் பொறியாளர் (Engineer in Chief) என்று பெயர் மாற்றம் செய்தல் வேண்டும்.
தொழில்நுட்பம் தொடர்பான கருத்துருக்களைப் பரிசீலித்து அரசுக்கு ஆலோசனை வழங்கிட நெடுஞ்சாலைத் துறைக்கென தலைமைச் செயலகத்தில் தலைமைப் பொறியாளர் நிலையில் சிறப்புச் செயலாளர் (Special Secretary) பதவி ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் (TNRIDC) செயல் இயக்குநராகப் பணியில் உள்ள தலைமைப் பொறியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில், திட்டப் பணிகள் காலதாமமின்றி விரைவில் நிறைவேற, திட்டங்களைச் செயல்படுத்துகின்ற பொறியாளர்களுக்கும், அதற்கு உதவுகிற பணியாளர்களுக்கும், 10% விழுக்காடு ஊதியத்தைக் கூடுதல்படி என்கிற அடிப்படையில் வழங்க வேண்டும் எனப் பொறியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அனைத்தையும் கனிவுடன் கேட்டறிந்த அமைச்சர், கோரிக்கைள் அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தார்."
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT