Published : 17 Dec 2021 04:20 PM
Last Updated : 17 Dec 2021 04:20 PM
கட்சிக்காரனைத் தொட்டால் கையை ஒடிப்பேன் எனக் கரூரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்தார்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், அம்மா மினி கிளிக்குகளை மூடுவதைக் கண்டித்தும், அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்கக் கோரியும், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்தும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் இன்று (டிச.17-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, ''ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்தான் திமுகவினர் கவனம் உள்ளது. ஜனவரியில் உதயநிதி அமைச்சர், அதன் பிறகு துணை முதல்வர், அதன் பிறகு முதல்வர். பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதாகக் கூறினர். ஆட்சிக்கு வந்து 7 மாதங்களாகியும் வழங்கவில்லை. காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை.
அம்மா மருந்தகம், அம்மா உணவகம் ஆகியவற்றை மூடினால் திமுகவுக்கு முடிவு கட்டப்படும். கல்வெள்ளி கொலுசு கொடுத்தும், முன்பு அரவக்குறிச்சியில் 3 சென்ட் நிலம் கொடுப்பதாகவும், ரூ.2,000 டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் ஒருவர். ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் கொடுத்தவர். மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் 11.05 மணிக்கு மாட்டு வண்டிகளில் ஆற்றில் மணல் எடுக்கலாம் என்றார். அவர்கள் கடிகாரத்தில் மணி 11.05 ஆகவில்லை போலும். 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் மனதில் நினைக்க வைத்துள்ளனர்.
கரூர் சுற்றுவட்டச் சாலை என 10 ஆண்டுகளாகக் கூறிக்கொண்டுள்ளனர். திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்குகள் உள்ளன. அந்தமானில் முதலீட்டு விவரங்களை மத்திய அரசு திரட்டிக்கொண்டுள்ளது. விரைவில் ஒரு அமைச்சர் கம்பி எண்ணவேண்டி இருக்கும். குட்கா, கஞ்சா, கந்துவட்டி என அதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு வருகின்றனர். கட்சிக்காரனைத் தொட்டால் கையை ஒடிப்பேன். கட்சிக்காரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்னால் நிற்பேன். இந்தக் கட்டப் பஞ்சாயத்து ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்.
கரூர் எஸ்.பி. கரை வேட்டி கட்டாத கூடுதல் மாவட்டச் செயலாளராக உள்ளார். டிஎஸ்பி நகரச் செயலாளர், இன்ஸ்பெக்டர்கள் ஒன்றியச் செயலாளர்களாக உள்ளனர். விரைவில் ஆட்சி மாற்றம் வரும் அப்போது தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான சின்னசாமி பேசும்போது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரம், திறமை இல்லாதவர். கருணாநிதி கெட்டிக்காரர். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற மோடி திட்டத்தின்படி இன்னும் 2 ஆண்டுகளில மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்துவிடும். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” என்றார்.
மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் சிவசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், உறுப்பினர் எஸ்.திருவிகா, கரூர் நகரச் செயலாளர்கள் (கரூர் மத்தி) வை.நெடுஞ்செழியன், (கரூர் தெற்கு) வி.சி.கே.ஜெயராஜ், கரூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் துணைத் தலைவர் தானேஷ் என்.முத்துகுமார், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT