Published : 17 Dec 2021 03:38 PM
Last Updated : 17 Dec 2021 03:38 PM
புதுக்கோட்டை: அதிமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக அரசு ஓரவஞ்சனை செய்வதாகப் புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் கண்டனப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் திலகர் திடலில் திமுக அரசைக் கண்டித்து அதிமுவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
"தேர்தலின்போது பெட்ரோலுக்கான வரியை ரூ.4 குறைப்பதாகக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் ரூ.3 மட்டுமே திமுக குறைத்தது. டீசலுக்கான வரியைக் குறைக்காததால்தான் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. மருத்துவர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆட்சியாளர்கள் அதை மூடிவருவது கண்டிக்கத்தக்கது. இவை மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததை இந்த அரசு கொடுக்கவில்லை. மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது.
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவைதான். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று எதையாவது கூறமுடியுமா?
மேலும், அதிமுகவினர் மக்கள் பிரதிநிதியாக உள்ள பகுதியில் அரசு எந்த திட்டத்தையும் கொடுப்பதில்லை. வீட்டுக்கான குடிநீர் இணைப்பாக இருந்தாலும் அதைக் கேட்பது அதிமுககாரராக இருந்தால் கொடுக்க மறுக்கிறது. திமுக அரசானது அதிமுக மக்கள் பிரதிநிதிகளைப் புறந்தள்ளி, ஓரவஞ்சனை செய்கிறது.
7 மாவட்ட மக்களுக்காக அதிமுக அரசால் தொடங்கப்பட்ட காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் ஆமை வேகத்தில்தான் உள்ளது. இந்த வாழ்வாதாரத் திட்டத்துக்கு இதுவரை திமுக அரசு எந்தப் பணியையும் செய்யவில்லை. வரும் காலங்களில் நடைபெறக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய தேர்தல்களை வலிமையோடு எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் ஆட்சிக்கு வந்தார்கள்.
அதேபோன்று, தற்போதைய சோதனைக் காலத்தை எதிர்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மருத்துவப் பணியாளர்கள் காப்பாற்றப்பட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்".
இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT