Published : 17 Dec 2021 02:43 PM
Last Updated : 17 Dec 2021 02:43 PM
திருநெல்வேலியில் பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை பொருட்காட்சி திடல் அருகே, 100 ஆண்டுகள் பழமையான பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உயிரிழப்பு நேர்ந்ததற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''திருநெல்வேலியில் பள்ளிக்கூடச் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அம்மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் விரைவில் முழு நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களில் அலட்சியம் காட்டக்கூடாது என்பதற்கு நெல்லை சம்பவம் ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. இனி வரும் காலத்தில் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்''.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT