Published : 17 Dec 2021 01:58 PM
Last Updated : 17 Dec 2021 01:58 PM

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

கோப்புப் படம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

"தமிழர்களின் வாழ்வாக அவர் தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர், தம் அன்னையை வாழ்த்திப் பாடப் பொதுவான பாடல் ஒன்றை ஏற்க வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையை ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், இலக்கிய அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ எனும் பாடல் பாடப்பட வேண்டும் எனும் கோரிக்கை 1913-ம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றது.

இந்தப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக, 1914-ம் ஆண்டு முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடி வந்துள்ளார்கள். மேலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது. இதனைத் தமிழக அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதியிடம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தனர்.

தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, 1970-ம் ஆண்டு, மார்ச் திங்கள் 11-ம் தேதியன்று நடந்த அரசு விழாவில் அன்றைய முதல்வர் கருணாநிதி பேசும்போது, ''இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். 'நீராருங் கடலுடுத்த' எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அமையும்’’ என்று அறிவித்தார்.

அதன்படியே 1891-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள பாயிரத்தில் “தமிழ்த் தெய்வ வணக்கம்’’ எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியைத் தமிழ்த் தாயைப் போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 23 நவம்பர் 1970-ம் ஆண்டு அன்று, கருணாநிதி தலைமையில் அமைந்த அன்றைய தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணையும் வெளியிட்டுள்ளது.

அவ்வரசாணையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது குறித்து, சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலையை ஒட்டி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்கள், நிகழ்ச்சியில் பாடவேண்டும் எனவும் சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நேர்வில் அன்னைத் தமிழ் மொழியைப் போற்றிடும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவதை ஒருங்கிணைத்து, நெறிமுறைப்படுத்த வேண்டிய நிலையில், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள், 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்படவேண்டும்,

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும்.

அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொது நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்."

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon