Published : 17 Dec 2021 08:25 AM
Last Updated : 17 Dec 2021 08:25 AM
மத்திய அரசின் நிதியுதவி ரூபாய் 1200 கோடி அளவுக்குப் பெற்ற பிறகும் தமிழ்நாடு 13 பெரிய மாநிலங்களில், 12ஆம் இடத்தில் தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதாக மத்திய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர், கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று, 16 டிசம்பர் 2021, மக்களவையில், சுவச் சுர்வேக்சன் ஆய்வுத் திட்டத்தின்படி தரவரிசையில் 12 ஆம் இடம் பெற்று கடைசி இடத்தில் உள்ள தமிழகத்தின் நிலையை முன்னேற்ற, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் தூய்மையைப் பராமரிக்க எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது? என்றும், நிலைமையை சீரமைக்க ஏதேனும் முயற்சிகள் உள்ளதா? என்றும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர், கவுஷல் கிஷோரிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை இணையமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:
100க்கும் அதிகமான நகர்ப்புற அமைப்புகள் உள்ள 13 மாநிலங்களில், தமிழ்நாடு 12வது இடத்தில் உள்ளதாக சுவச் சுர்வேக்சன் ஆய்வுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசால் நகர்ப்புற அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரம், திடக்கழிவு மேலாண்மையில் நகரங்களின் செயலாக்கம், பொதுக் கழிப்பிடங்களின் வசதி மற்றும் கழிவுநீர் மேலாண்மை
ஆகிய மூன்று காரணிகளின் மூலம் நகரங்கள் வகைப்படுத்தப்பட்டு, அதனடிப்படையில் மாநிலங்களின் செயல்பாடு கணக்கிடப்படுகிறது.
நகரத் தூய்மை – இந்தியா திட்டத்தின்படி 1200 கோடி ரூபாய், தமிழக அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, நீடித்த தூய்மையை உறுதிப்படுத்துதல், மக்களிடம் விழிப்புணர்வைப் பெருக்குதல், அரசின் உடனடி செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அதாவது 2026 வரையிலான காலகட்டத்திற்கு ரூபாய் 1,41,600 கோடி அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் நகர்ப்புற அமைப்புகள் பெருமளவில் தூய்மையான இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும்.
இவ்வாறாக மத்திய அமைச்சர் விரிவான பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசு மக்களவையில் தெரிவித்த தகவல்களின்படி, சென்ற ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசின் நிதியுதவி ரூபாய் 1200 கோடி அளவுக்குப் பெற்ற பிறகும் தமிழ்நாடு 13 பெரிய மாநிலங்களில், 12ஆம் இடத்தில் தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT