Published : 16 Dec 2021 05:52 PM
Last Updated : 16 Dec 2021 05:52 PM
சென்னை: தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்ளிட்ட 77 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது தமிழகத்திற்குள்ளும் ஒமைக்ரான் பரவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாகவே மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி தமிழகம் வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன் நைஜீரியா நாட்டிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் தொற்று உறுதியானது. அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக பெங்களூரூவில் உள்ள இன்ஸ்டெர்ம் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பரிசோதனை முடிவில், நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 7 பேரின் மாதிரி முடிவுகள் இன்னும் வரவில்லை என்று நேற்று கூறப்பட்டது. தற்போது ஒமைக்ரான் அறிகுறிகள் உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நைஜீரியாவிலிருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதை அடுத்து அவர்களோடு தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகள் மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த 7 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எட்டாவதாக காங்கோவிலிருந்து சென்னை வந்து ஆரணிக்குச் சென்ற பெண்ணுக்கும் ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ளது. தற்போது அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சோதனைக்கு உட்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அச்சம் தேவையில்லை
கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி நுரையீரலுக்குள் சென்றாலும் கூட அது நுரையீரல் திசுக்களில் பாதிப்பு ஏற்படுத்துவது என்பது டெல்டாவை விட 10 மடங்கு குறைவு எனக் கண்டறிந்துள்ளனர். ஒமைக்ரான் தொற்று ஏற்பட்ட 24 மணி நேரத்தில் அது நுரையீரலில் பரவிவிடுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவும் என்றாலும் ஒமைக்ரான் குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் 77 நாடுகளில் பரவியிருந்தும் இதுவரை ஓர் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பது மிகவும் ஆறுதலளிக்கும் செய்தியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT