Last Updated : 16 Dec, 2021 05:07 PM

 

Published : 16 Dec 2021 05:07 PM
Last Updated : 16 Dec 2021 05:07 PM

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : புதுச்சேரியில் ரூ.500 கோடி பணப் பரிவர்த்தனை பாதிப்பு

புதுச்சேரி: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் ரூ.500 கோடி அளவில் பணப் பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.

பொதுத்துறை வங்கிகள், மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (டிச.16) தொடங்கியது. இதன்படி பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மசோதாவைக் கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். புதுச்சேரி யூகோ முதன்மை வங்கி முன்பு வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யூகோ வங்கி கண்வீனர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வங்கி சங்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோஷமிட்டனர்.

புதுச்சேரியில் மட்டும் 1,200 ஊழியர்கள் வரை போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இரண்டு நாட்களில் வங்கி பரிவர்த்தனை பணிகள் எதுவும் நடைபெறாது என்றும், இதனால் ரூ.500 கோடி அளவில் பணப் பரிவர்த்தனை பணிகள் முடங்கும் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x