Published : 16 Dec 2021 05:03 PM
Last Updated : 16 Dec 2021 05:03 PM
கரூர்: உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கரூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே தொடர்பு காத்திருப்புப் போராட்டம் நடத்துவதற்காக திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று (டிச.16-ம் தேதி) கரூர் வந்தனர்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகேயிருந்து ஊர்வலமாகச் செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கேயே விவசாயிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து மாநிலத் தலைவர் சண்முக சுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளர் விசுவநாதன், மாநிலப் பொருளாளர் ரமேஷ், கொள்கை பரப்புச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்டவர்களிடம் கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தைக் கைவிட மறுத்து மீண்டும் விவசாயிகள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 81 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கொள்கை பரப்புச் செயலாளர் சிவகுமார் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 40 வழக்குகளில் சிறைவாசம் பெற்று சிறிது சிறிதாக இழப்பீட்டை அதிகரித்துப் பெற்றோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இழப்பீடுகளை உடனடியாக சட்டப்படியாக வழங்க வேண்டும். சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்னும் திமுக அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. விடியல் அரசு விவசாயிகளுக்கு விடியாத அரசாகத்தான் உள்ளது. எங்கள் எதிர்பார்ப்பில் திமுக அரசு மண் அள்ளிப்போட்டுவிட்டது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT