Published : 16 Dec 2021 04:59 PM
Last Updated : 16 Dec 2021 04:59 PM

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பரப்பளவைக் குறைக்கும் முடிவு வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் | கோப்புப் படம்.

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பரப்பளவைக் குறைக்கும் முடிவு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் சரணாலயம், பருவநிலை மாறுபாட்டிற்கேற்ப பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட சூழல் மிகுந்த பகுதியாக அறிவிக்கப்பட்ட இடம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.

இந்நிலையில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றின் விரிவாக்கத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை 5 கி.மீ. ரேடியஸ் சுற்றளவில் இருந்து 3 கி.மீ. சுற்றளவாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக 2020-ல் தமிழக அரசு அறிவித்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனியார் நிறுவனத்துக்கு அரசு உதவவில்லை என வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பறவைகள் சரணாலயப் பரப்பளவைக் குறைக்கும் முடிவு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

2020-ல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் அரசின் முடிவால் கடும் பாதிப்புகள் இருக்கும் என பூவுலகின் நண்பர்கள் குழு அப்பொழுதே எதிர்ப்பு தெரிவித்தது.

தற்போது பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பறவைகள் சரணாலயப் பரப்பளவுக் குறைக்கும் முடிவை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளதை வரவேற்றுள்ளார்.

''புதிது புதிதாக பறவைகள் சரணாலயங்கள் அறிவித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏற்கெனவே இருந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்பட்டிருந்த பாதிப்பை நீக்கும் அறிவிப்பாக இதனைப் பார்க்கிறோம்'' பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x