Published : 16 Dec 2021 03:19 PM
Last Updated : 16 Dec 2021 03:19 PM

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் உதவி: அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு வழங்கினர்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுயதொழில் புரிவதற்கான ரூ.28.85 கோடி கடன் உதவித் தொகையை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சேகர் பாபு கூட்டாக வழங்கினர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 719 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,785 பயனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கு ஏதுவாக ரூ.28.85 கோடி வங்கிக் கடன் உதவியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் இன்று (16.12.2021) ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு சுயதொழில் புரிய ஏதுவாக வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பாராமல் சுயதொழில் புரிந்து சமூகத்தில் தன்னம்பிக்கையோடும், தன்மானத்தோடும் வாழவேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பல்வேறு விதமான சுயதொழில் புரியும் திட்டங்கள் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டன.

இன்று (16.12.2021) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 719 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,785 பயனாளிகளுக்கு சுயதொழில் புரிய ஏதுவாக ரூ.28.85 கோடி வங்கிக் கடன் உதவியும், PM ஸ்வா நிதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தொழில் புரிய ஏதுவாக ஒரு பயனாளிக்கு ரூ.10,000 வீதம் 50 நபர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் கடனுதவியாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கடனுதவி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றம், மறுமலர்ச்சி என்பது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் என்றால் மிகையாகாது. 10 ஆண்டு காலம் சோர்ந்து கிடந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தற்பொழுது புதுப்பொலிவு பெற்றிருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழுமுதற் காரணம் முதல்வர் ஸ்டாலின்தான்.

முதல்வர் பதவியேற்ற 7 மாத காலத்திற்குள்ளாகவே அதாவது, 13.12.2021 அன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 58,463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 7,56,142 பயனாளிகளுக்கு ரூ.2,750 கோடி வங்கிக் கடன் உதவிகளை வழங்கியுள்ளார்.

இந்த 5 மாத காலத்தில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், கடந்த ஒரு மாத காலமாக வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டு, குறிப்பாக 35 நாட்கள் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்திந்து மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டார். இப்படி பல்வேறு பொருளாதார நெருக்கடிகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.2,750 கோடிக்குக் கடனுதவிகளை வழங்கியுள்ளார். எனவே, சமூகத்தில் மகளிர் தன்னம்பிக்கையோடு வாழ முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாவட்ட மகளிர் திட்ட அலகு திட்ட அலுவலர் லலிதா பிரபாகர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்" என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x