Published : 16 Dec 2021 02:30 PM
Last Updated : 16 Dec 2021 02:30 PM

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்குப் பயிற்சி: ரூ.1.70 கோடி விடுவித்து அரசாணை வெளியீடு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்குத் தோட்டக்கலை, வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கப் பயிற்சிகள் வழங்க ரூ.1.70 கோடி விடுவிக்கத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 5,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்குத் தோட்டக்கலை, வேளாண் காடுகள் (Agro forestry), நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் ரூ.1.70 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்.

மேற்காணும் அறிவிப்பினைத் தொடர்ந்து 5,000 ஆதிதிராவிடர் மற்றும் 2,500 பழங்குடியின விவசாயிகளுக்குத் தோட்டக்கலை, வேளாண் காடுகள் (Agro Forestry), நர்சரி செடிகள், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கிடும் பொருட்டு ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 2,200 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட, 3,000 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.2,000/- வீதம் 3,000 விவசாயிகளுக்கு ரூ.60 லட்சத்தில் தோட்டக்கலை பயிற்சியும் (2 நாள் பயிற்சி) வழங்கப்படும்.

ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 200 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட 1,000 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.4,000/- வீதம் 1,000 விவசாயிகளுக்கு ரூ.40 லட்சத்தில் வனத்துறை பயிற்சியும் (2 நாள் பயிற்சி), மேலும் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 2,600 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 900 விவசாயிகள் உள்ளிட்ட, 3,500 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.2,000/- வீதம் 3,500 விவசாயிகளுக்கு ரூ.70 லட்சத்தில் வேளாண் பொறியியல் பயிற்சியும் (3 நாள் பயிற்சி) வழங்கப்படும்.

இதற்காக ரூ.1.70 கோடி விடுவிக்க நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் கூறியுள்ளார்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x