Published : 16 Dec 2021 03:06 AM
Last Updated : 16 Dec 2021 03:06 AM
மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ், தன் மீதான வழக்கில் இருந்து எப்படி விடுவிக்கப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர் அனந்தபத்மநாபன் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ். இவர் அண்மையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது குறித்து, தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக மதுரை மாநகர் சைபர் கிரைம் போலீஸில் திமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி பாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாரிதாஸ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) மற்றும் (2), 124 (ஏ), 504, 153 (ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ட்விட்டர் பதிவுக்காக மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை முழுமையாக ரத்து செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மாரிதாஸ் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் கூறியதாவது:
மாரிதாஸ் மீதான முழு வழக்கும் கருத்துரிமை தொடர்பானது. கருத்துரிமை என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இருப்பினும், அதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. நமது கருத்துரிமை அடுத்தவருக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்பது முக்கியம்.
தலைமை தளபதி இறப்பு தொடர்பாக பலர் சமூக வலைதளங்களில் தவறான ஈமோஜிகளை பதிவிட்டனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் சில தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூட பதிவிட்டிருந்தனர். இதுபோன்ற ட்வீட்களை பதிவிட்டால் மட்டுமே நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், தூண்டிவிட்டதாகவும் அர்த்தம்.
‘தலைமை தளபதி மரணம் வருத்தம் தரக் கூடியது. அதற்காகதுக்கம் அனுஷ்டிக்க வேண்டாம். ஆனால், சிரிப்பது போல் ஈமோஜிகளை பதிவிட்டு மரணத்தைக் கொண்டாடியது தவறு.
இபிகோ 153 ஏ பிரிவு மதம், இடம், மொழி, ஜாதி அடிப்படையில் மோதலை தூண்டுவது என்பதாகும். அவரது ட்வீட்டில் மதம், இனம், மொழி, ஜாதி என எந்த அடையாளமும் இல்லை. இதனால் இப்பிரிவு பொருந்தாது.
இபிகோ 124 ஏ மாநில அரசுக்கு எதிராக மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகும். அரசு என்பது வேறு, ஆட்சி நடத்தும் கட்சி என்பது வேறு. திமுக ஆட்சியில் இப்படியிருக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்றுதான் சொல்லியுள்ளார். திமுகதான் தூண்டிவிடுகிறது என்றுகூட சொல்லவில்லை. அரசுக்கு எதிராக எதையும் அவர் சொல்லவில்லை. இதனால் இப்பிரிவும் செல்லாது.
தலைமை தளபதி மரணத்துக்கு வருத்தப்பட்டுத்தான் மாரிதாஸ் அந்தப் பதிவை போட்டுள்ளார். அவரது மரணத்துக்கு இவர்கள்தான் காரணம் என யாரையும் அவர் சுட்டிக் காட்டவில்லை. எனவே இபிகோ 504 (அமைதியை சீர்குலைப்பது) பிரிவும் பொருந்தாது. இபிகோ 505 (2) பிரிவு இரு தரப்பினர் இடையே மோதலை உருவாக்குவது ஆகும். இந்த ட்வீட்டில் எந்தப் பிரிவையும் மாரிதாஸ் குறிப்பிடவில்லை. இதனால் இப்பிரிவும் செல்லாது.
மொத்தத்தில் மாரிதாஸ் கருத்து சுதந்திரத்துக்கான வரைமுறையை மீறவில்லை. அவரது ட்வீட் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இல்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றங்கள் இதுவரை கருத்துரிமைக்கு ஆதரவாகவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. நக்கீரன் கோபால் மீது 124 ஏ பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கருத்துரிமைக்கு ஆதரவாகவே தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அப்படியிருக்கும்போது மாரிதாஸ் வழக்கின் தீர்ப்பை விமர்சிப்பது நியாயமல்ல. தீர்ப்பில் ஆட்சேபம் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். அதை செய்யாமல் நீதிபதியை விமர்சிப்பது தவறு.
இன்று மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்தவர்கள், தீர்ப்பை இப்போது விமர்சிப்பவர்கள் மீதும் நாளை வழக்குப் பதிவு செய்யலாம். அப்போது அவர்களுக்கும் இந்த தீர்ப்புதான் பயன்படும். பல்வேறு முன்தீர்ப்புகளை ஆராய்ந்துதான் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வாறு வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT