Published : 15 Dec 2021 09:59 PM
Last Updated : 15 Dec 2021 09:59 PM

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் வந்துவிட்டது என்று பதற்றப்படுவதைவிட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:

நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பு. அந்த நபர் அறிகுறிகள் அற்றவராக இருக்கிறார். அவருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த குடும்பத்தினர் 7 பேருக்கும் எடுக்கப்பட்ட மாதிரியிலும் எஸ் ஜீன் இல்லாமல் இருக்கிறது. அதனால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 7 பேருமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று வந்துவிட்டதே என மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். மாறாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். இதுவரை 15% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஒமைக்ரானை எதிர்கொள்ள தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளன. 1400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் தென் ஆப்பிரி்க்கா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும்பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் தடையும் விதித்துள்ளன. இந்நிலையில் இதுவரை

இந்தியா உள்பட 65க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 69 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் ஒமைக்ரான் தொற்று அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x