Published : 15 Dec 2021 04:13 PM
Last Updated : 15 Dec 2021 04:13 PM

ராணி மேரி கல்லூரியின் 5,500 மாணவிகள் சுகாதாரத் தூதுவர்களாக நியமனம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: ராணி மேரி கல்லூரியில் பயிலும் 5,500 மாணவிகள் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

"ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொள்வதிலும், இங்கு மாணவிகளின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இக்கல்லூரி மாணவிகளின் ஆர்வத்தைப் பாராட்டும் வகையிலும், அவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இங்கு பயிலும் 5,500 மாணவிகள் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மாணவிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் உறவினர்களுக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

இந்தக் கல்லூரியில் பயிலும் 5,500 மாணவிகளில் 3800 மாணவிகள் இரண்டு தவணை தடுப்பூசியும், 800 மாணவிகள் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 900 மாணவிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களும் இந்தத் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு ஆர்வமாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கல்லூரி என்கிற நிலையை ராணி மேரி கல்லூரி ஓரிரு நாட்களில் அடைந்துவிடும். இதற்காக கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நைஜீரியா நாட்டிலிருந்து சென்னை வந்த ஒரு நபருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் மரபியல் மாற்றம் இருந்தது. அவருடன் தொடர்புடைய உறவினர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில் 6 நபர்களுக்கு கரோனா தொற்றும், அதில் மரபியல் மாற்றமும் கண்டறியப்பட்டதால் இந்த 7 நபர்களின் தடயவியல் மாதிரிகள் ஒமைக்ரான் வகை தொற்றா எனக் கண்டறிய பெங்களூருக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. 7 நபர்களும் சென்னை கிங்ஸ் நிறுவன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்படுகின்றனர். அதன்படி, இதுவரை 12,039 நபர்களுக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளிலிருந்து 63,411 பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 2 சதவீதம் நபர்களுக்கு, அதாவது 1,834 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 40 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 36 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் மீண்டும் ஆய்வு செய்வதற்காக பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மரபியல் மாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வகை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதுமே நிரந்தரத் தீர்வு எனத் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், ஆக்சிஜன் சுவாச உதவி போன்ற தீவிர பாதிப்பு இன்றி லேசான அறிகுறிகளுடன் உயிர்ப் பாதுகாப்பு உள்ளது.

பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வரும் நபர்களில் 2% நபர்களுக்கு மட்டும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும், விமான நிலையத்திலிருந்து வெளிவரும்போது வெப்பநிலை பரிசோதனை மற்றும் மருத்துவக் குழுவால் பரிசோதிக்கப்படும்போது ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டாலும் அவர்கள் வீட்டுத் தணிமையில் 8 நாட்களுக்கு இருக்க அறிவுறுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவது மற்றும் 18 வயதிற்குக் கீழ் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் முடிவினைப் பொறுத்து முறையான வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x