Published : 15 Dec 2021 11:58 AM
Last Updated : 15 Dec 2021 11:58 AM

பொட்டாஷ் உரத் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

கோப்புப் படம்

சென்னை: விவசாயிகளுக்கு பொட்டாஷ் உரத் தட்டுப்பாட்டைப் போக்கவும், போதிய விலையில் பொட்டாஷ் உரம் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"நெற்பயிருக்குப் போதுமான நோய் எதிர்க்கும் ஆற்றல், பூச்சி தாக்குதலைத் தாங்கும் திறன், அதிக குளிர் மற்றும் இதர சாதகமற்ற நிலைகளைத் தாங்கும் திறன் ஆகியவற்றை சாம்பல் சத்து அளிக்கிறது. இதன் மூலம் வேர் வளர்ச்சி சீரடைந்து, தரம் உயர்ந்து, மகசூல் அதிகரித்து, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இந்தச் சாம்பல் சத்துக்கு விவசாயிகள் பொட்டாஷ் உரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த பொட்டாஷ் உரத்திற்கு தற்போது டெல்டா மாவட்டங்களில் பற்றாக்குறை நிலவுவதாகவும், வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த நெற் பயிற்களைப் பாதுகாப்பதற்கு பொட்டாஷ் உரம் தேவைப்படுகின்ற நிலையில், வெளிச்சந்தையில் உரத்தின் விலை விஷம் போல் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளதாகவும், ஒரு மூட்டை பொட்டாஷ் உரத்திற்குக் கூடுதலாக 700 ரூபாய் கொடுக்கக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பொட்டாஷ் உரம் இருப்பில் இல்லையென்றும், முந்தைய விலையான, அதாவது ஒரு மூட்டை 1,041 ரூபாய்க்கு பொட்டாஷ் உரம் கிடைக்க வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

தனியார் வியாபாரிகள் அவர்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்து பொட்டாஷ் உரத்தின் விலையை உயர்த்துவதாகவும், நெற்பயிரின் பரப்பை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ள மாநில அரசு, அதற்குத் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் தஞ்சை காவிரி விவசாய பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதாகவும், அதைக் காப்பாற்ற விவசாயிகள் போராடி வருவதாகவும், இறக்குமதி செய்யப்படும் உரத்தின் மீதான மானியத்தை நீக்கியதுதான் தற்போதைய விலை உயர்விற்குக் காரணம் என்றும், ஏற்கெனவே இருப்பில் உள்ள உரத்தைப் பழைய விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று உர வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதைக் கண்காணிக்க சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறும் முகவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு சார்பிலும் நேற்று செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏற்கெனவே இருப்பில் உள்ள 18,600 மெட்ரிக் டன் பொட்டாஷ் 1,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், புதிதாக வந்துள்ள பொட்டாஷ் உரம் ஒரு மூட்டை 1,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உண்மை நிலை வேறாக இருக்கிறது என்றும், இருப்பில் உள்ள பொட்டாஷ் உரத்தை 700 ரூபாய் கூடுதலாக விலை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு இல்லை என்ற நிலைமை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும், உரிய காலத்தில் உரங்களைப் பயன்படுத்தினால்தான் அது உரிய பயனை விவசாயிகளுக்கு அளிக்கும் என்ற சூழ்நிலையில், நேற்றுதான் தூத்துக்குடி துறைமுகத்திற்கு உரங்கள் வந்துள்ளன என்று கூறுவது காலம் தாழ்ந்த நடவடிக்கை என்றும், இந்த உரம் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று சேர மேலும் தாமதமாகும் என்றும், விவசாயிகள் புகார் தெரிவிக்க மாநில உர உதவி மையம் தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து இருப்பது கண்துடைப்பு என்றும் கூறப்படுகிறது.

இதிலிருந்து, வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களையும், இடுபொருட்களையும் உரிய காலத்தில் நியாயமான விலையில் வழங்க அரசு தவறிவிட்டது என்பது தெளிவாகிறது. அரசின் மெத்தனப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலைமையையும், உரத்தின் இருப்பை முன்கூட்டியே அரசு உறுதி செய்யாததையும் கருத்தில் கொண்டு, பொட்டாஷ் உரம் பழைய விலைக்கே, அதாவது ஒரு மூட்டை 1,040 ரூபாய் என்ற விலைக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் உள்ளது.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொட்டாஷ் உரத் தட்டுப்பாட்டை நீக்கி, விவசாயிகளுக்கு முந்தைய விலையில், அதாவது ஒரு மூட்டை 1,040 ரூபாய் என்ற விலையில் பொட்டாஷ் உரம் தாராளமாக விரைந்து கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x