Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

அனைத்துக்கும் குரல் கொடுக்க நான் வேண்டும்; பாமகவுக்கு ஓட்டு மட்டும் போட மாட்டார்கள்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதங்கம்

விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். உடன் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர்.

விழுப்புரம்

அனைத்துக்கும் குரல் கொடுக்க நான் வேண்டும்; அறிக்கை வெளியிட நான் வேண்டும். ஆனால் ஓட்டு மட்டும் பாமகவுக்கு போட மாட்டார்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதங்கப்பட்டு பேசியுள்ளார்.

விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி பாமக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத் தில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் மாநிலத்தலைவர் ஜி கே மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:

பெரும்பான்மை ஆள வேண் டும்; சிறுபான்மை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் எது வென்றது என சிந்தித்து பார்க்க வேண்டும்.

எளிமையான மக்கள் உங்க ளுக்கான பங்கு கிடைக்க வேண்டும் என்றுதான் இந்த 83 வயதிலும் கூட்டங்களுக்கு வருகிறேன். விழுப்புரம் நகராட்சியில் சமீபத்தில்தான் பாஸ்கரன் என்ற வன்னியர் நகர்மன்றத் தலைவராக முடிந்தது. தமிழகத்தில் 300 காவல் உயர் அதிகாரிகளில் 5 பேர் மட்டுமே நம் இனத்தைச் சேர்ந்தவர்கள். 1952-ம் ஆண்டிலேயே நாம் 40 எம்எல்ஏக்களை பெற்றுள்ளோம். இதுவரை பதவி வகித்த முதல்வர்களில் ஒருவர் கூட நம் இனத்தவர் இல்லை. இச்சமூகம் அழிய வேண்டும் என்று எண்ணுபவர்கள்தான் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். இந்த இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு முக்கிய பங்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உண்டு. ஆனால், அவரை இத்தொகுதியில் வெற்றிவாய்ப்பை இழக்க வைத்தார்கள்.

இந்த ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன். இதில், யாருக்கு என்ன பிரச்சினை என்றால், பல விஷயங்களில் முதன்முதலில் நான் குரல் கொடுத்துள்ளேன். அனைவருக்கும் குரல் கொடுக்க, அறிக்கை வெளியிட ராமதாஸ் வேண்டும். ஆனால் ஓட்டு மட்டும் நமக்கு போட மாட்டார்கள். ஒரே ஒருமுறை பாமகவுக்கு வாக்களியுங்கள். மாநகாட்சி, நகராட்சித் தேர்தலில் நாம் தனித்து போட்டியிட உள்ளோம். 10.5 சதவீத இட ஒதுக்கீடை பெறாமல் நாம் ஓயமாட்டோம் என்றார்.

இக்கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள் பாலசக்தி, சிவகுமார் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர் தங்கஜோதி, வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் அன்புமணி, நகரச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x