Last Updated : 14 Dec, 2021 09:35 PM

2  

Published : 14 Dec 2021 09:35 PM
Last Updated : 14 Dec 2021 09:35 PM

தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது மென்மையானப் போக்கை கடைப்பிடிக்கும் மத்திய அரசு: முஸ்லிம் லீக் எம்.பி நவாஸ்கனி குற்றச்சாட்டு

புதுடெல்லி

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது, மென்மையானப் போக்கை கடைப்பிடிப்பதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்பி மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பேசினார்.

அப்போது அவர், ”என்னுடைய தொகுதி பெரும்பான்மையாக கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியது. மீனவர்கள் அன்றாடம் படக்கூடிய இன்னல்களையும், ஆபத்துக்களையும், அச்சுறுத்தல்களையும் பற்றி இங்கே பேசுவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

இதனை அரசினுடைய கவனத்திற்கு கொண்டுவருவது அந்த மக்களுடைய பிரதிநிதியான என்னுடைய கடமை என உணர்ந்து, இந்த பிரச்சினையை இந்த அவைக்கு கொண்டு வருகிறேன்.

ஒருபுறம் என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஒருவித அச்ச உணர்வோடு வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.மறுபுறம் இயற்கை சீற்றம், நடுக்கடலிலேயே விபத்து போன்ற பல்வேறு மரணங்கள் மீனவர்களை தொடர்கின்றன.

அந்த உயிரிழப்பை தவிர்ப்பதற்கு மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இந்த அரசிற்கு இருக்கிறது என்பதை வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த மக்களவையிலேயே பலமுறை இலங்கை கடற்படையினருடைய அத்துமீறல்களைப்பற்றி வலியுறுத்தி இருக்கின்றேன். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றபோது இந்த அரசு ஒரு மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறது.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும்போது இயற்கை சீற்றமோ, விபத்தோ ஏற்படுகின்ற போது நடுக்கடலிலேயே படகு கவிழக் கூடிய நிலையில் அவர்களை மீட்பது சவாலான பணியாக இருக்கின்றது.

அதற்கு கடலோர காவல்படையினர் தான் அந்த மீட்பு பணிகளை மேற்கொள்கின்றார்கள். அவர்களுக்கு கூடுதலான படகுகளை ஒதுக்கவேண்டும். அவர்களிடம், குறைவான எண்ணிக்கையிலேயே ரோந்துப் படகுகள் உள்ளன.

கடலோர காவல் படையின் காவலர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன. அவர்களிடம் மீட்பு பணிக்கான உபகரணங்களும் குறைவாக இருக்கின்றன.

கடலோர காவல்படைக்கு எரிபொருள் உள்ளிட்ட அனைத்து மீட்பு உபகரணங்களையும் அவர்களுக்கு போதுமான அளவு ஒதுக்க வேண்டும். சமீபத்தில் கூட எனது நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரம், தங்கச்சிமடம், தொண்டி, கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளின் மீனவர்கள் விபத்துகளில் உயிரிழந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்படும்போது அரசு கூடுதலான அக்கறை செலுத்தி அவர்களை மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இயற்கை சீற்றம் ஏற்படுகின்ற நேரத்தில் கடலோர காவல் படையினரால் படகுகளால் கூட மீட்க முடியாது.

அந்த நேரத்தில் வான்வழியாக மீட்க ஹெலிகாப்டர் உதவி தேவைப்படுகின்றது. இவற்றை குறித்த நேரத்தில் விரைவாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x