Published : 14 Dec 2021 11:27 AM
Last Updated : 14 Dec 2021 11:27 AM
கல்குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளைக் களைந்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:
''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசும், அதற்கு அடுத்து வந்த அதிமுக அரசும் கல்குவாரிகள் மூலம் அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய பணம் தனியார் கையில் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தன. அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, குவாரிகளின் செயல்பாட்டை முறைப்படுத்தின.
பொதுவாக, ஒரு கல்குவாரி நடத்துவதற்கு அரசுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு வருடமும் எவ்வளவு யூனிட் ஜல்லி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று விரிவாக திட்ட அனுமதியில் தெரிவிக்க வேண்டும். மழைக்காலம் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஜல்லியின் தேவை குறைவு. எனவே, குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக விடுமுறையில் செல்வது வழக்கம்.
கோடை மற்றும் இதர மாதங்களில் கட்டுமானப் பணிகள் அதிகமாக நடைபெறும்; ஜல்லியின் தேவையும் அதிகம். அப்போது, அதன் விலை அதிகரிக்காத வண்ணம் குவாரி உரிமையாளர்கள் ஜல்லி உற்பத்தியை அதிகரிப்பார்கள். எனவே, ஜல்லியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, தேவைக்கேற்ப ஜல்லி உற்பத்தி அதிகரிக்கப்படும். இதனால் விலை நிலையாக இருக்கும்.
உதாரணமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து ஜெயலலிதாவின் அரசு ஆட்சி செய்தபோதும், முதல் வருடம் சுமார் 12000 யூனிட் ஜல்லி தயாரிக்கப்படும் என்று கூறி கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி பெற்றவர்கள், ஒவ்வொரு மாதமும் பருவ நிலைக்கு ஏற்றவாறு, அதாவது மழைக்காலம் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஜல்லி உற்பத்தியினைக் குறைத்தும், மற்ற மாதங்களில் ஜல்லி உற்பத்தியினை அதிகரித்தும், ஒரு மாதத்திற்கு இத்தனை யூனிட் ஜல்லி உற்பத்தி செய்கிறோம் என்று அனுமதி கோரி விண்ணப்பித்தனர். உதவி இயக்குநர்களும் அதற்கேற்ப 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ அனுமதி வழங்கி வந்தனா். இதனால் சந்தையில் கட்டுமானத் தேவைக்கேற்றவாறு ஜல்லி கிடைப்பதில் எந்தவிதமான சிக்கல் இல்லாமலும், ஜல்லிக்கு செயற்கையான விலையேற்றம் இல்லாமலும் விலை நிலையாக இருந்து வந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கல்குவாரிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளில் ஒருசிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த ஆட்சியில, கடந்த இரண்டு மாதங்களாக கல் குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதி முறையில் மாற்றம் செய்யப்பட்டது. உதாரணமாக, ஆண்டுக்கு சுமார் 12000 யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப்படும் என்று கூறி குவாரி நடத்த அனுமதி பெற்றவர்கள், அந்த வருடத்திற்கான மொத்த உற்பத்தியை 12 மாதங்களுக்குச் சமமாகப் பிரித்து, மாதத்திற்கு 1000 யூனிட் ஜல்லி வீதம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற புதிய விதியினை, உதவி இயக்குநர் மூலமாக தமிழக அரசு தங்கள் மீது திணிப்பதாகக் கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதனால், மழைக் காலங்கள், பண்டிகைக் காலங்களில் கட்டுமானப் பொருட்களின் தேவை குறைவாக இருந்தாலும் அல்லது மற்ற மாதங்களில் அதிகமாக இருந்தாலும், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மொத்த ஆண்டு உற்பத்தியில், ஒரு மாதத்திற்கான சராசரி 1000 யூனிட் ஜல்லியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் புதிய நிபந்தனையை விதிப்பதாக, கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த அனுமதி முறை தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் 3 நாட்களுக்கு ஒருமுறை ஜல்லி உற்பத்தியாளர்கள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. தேவையான அனுமதியைப் பெற ஒருநாள் முழுமையாகச் செலவாகிறது என்று ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
இதனால், மூன்று நாட்களுக்கு அனுமதி வாங்கினாலும், மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லியை உற்பத்தி செய்யவும், வாகனங்களில் கொண்டுசெல்லவும் இயலும். இவ்வாறு முறைப்படி கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி வாங்கி, ஜல்லி உற்பத்தி செய்பவர்களை இந்த அரசு இவ்வாறு கெடுபிடி செய்கிறது?
ஆனால், 50 சதவீதத்திற்கு மேல் காலாவதியான கல்குவாரிகள், எந்தவிதமான அனுமதியும் பெறாமல், கவனிக்க வேண்டிய ஆளும் கட்சியினரை கவனித்துவிட்டு, ஜல்லி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதாக இச்சங்கத்தினா் தெரிவிக்கின்றனர். இதனால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் முழுவதும் எங்கே போகிறதென்று நான் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை.
கரூர், புதுக்கோட்டை, விருதுநகர்,தேனி, திண்டுக்கல் போன்ற ஒரு சில மாவட்டங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுகின்றன என்று கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும், இதுபோன்று விதிகளுக்குப் புறம்பாக கல்குவாரிகள் நடத்துபவர்கள், விதிகளின்படி செயல்படும் குவாரிகள், விதிகளை மீறிச் செயல்படுகிறார்கள் என்று அரசுக்கு மொட்டை பெட்டிஷன் போட்டு, தேவையின்றி மூடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா் என்று கல்குவாரி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த அரசு, உடனடியாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நடைமுறையை மாற்றி, பழையபடி 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ அனுமதி வழங்க வேண்டும் என்றும், காலாவதியான கல்குவாரிகளில் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் ஜல்லியை உற்பத்தி செய்து விற்பனை செய்வதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலதா ஆட்சியில், எப்படி கல்குவாரிகளின் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்குச் சென்றடைந்ததோ, அதன்படி இப்போதும் கல்குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT