Published : 14 Dec 2021 03:10 AM
Last Updated : 14 Dec 2021 03:10 AM
பழங்குடியின மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தண்டராம்பட்டு அருகே புளியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மனு அளித்துள்ளனர்.
தண்டராம்பட்டு அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணவி ரோகினி உள்ளிட்ட மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “மலைவாழ் சமூகத்தை சேர்ந்த நாங்கள், மலையாளி பழங்குடியினர் (எஸ்டி) சமூகத்தில் உள்ளோம். எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால், கல்வியை தொடர முடியவில்லை. மேலும், கல்வி ஊக்கத் தொகையும் பெற முடியவில்லை. உயர் கல்வியை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்டி மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்கினால், உயர்கல்வி படிக்க வழி பிறக்கும். புளியம்பட்டு, அருவங்காடு, கல்நாத்தூர், புதூர்செக்கடி ஆகிய கிராமங்களில் ஜாதி சான்றிதழுக்காக 50-ம் மேற்பட்ட மாணவர்கள் காத் திருக்கின்றனர். எங்களுக்கு மலையாளி எஸ்டி என ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.
நிலுவையில் 3 மாத ஊதியம்
துரிஞ்சாபுரம் ஒன்றிய டெங்கு மற்றும் கரோனா ஒழிப்பு களப் பணியாளர்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 83 பேர் பணியாற்றுகிறோம். எங்களுக்கு தினசரி ரூ.326 வழங்கப்படுகிறது.
செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான ஊதியம் வழங்க வில்லை. 3 மாதங்கள் ஊதியம் இல்லாத தால் எங்களது குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. 3 மாத ஊதியம் மற்றும் ஊக்கத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மஞ்சு விரட்டுக்கு அனுமதி
திருவண்ணாமலை மாவட்ட தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு மஞ்சு விரட்டு முன்னேற்றம் மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இந்தாண்டும் மஞ்சுவிரட்டு காளை விடும் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகளை அகற்ற அவகாசம்
பாமக மாவட்டச் செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் கீழ் பென்னாத்தூர் வட்டம் அண்டம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அளித்துள்ள மனுவில், “அண்டம்பள்ளம் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள, எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வீடு களை அகற்றிக் கொள்ள 6 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தொகுதி ஒருங் கிணைப்பாளர் ஜமீல் தலைமையில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், “பள்ளி, கல்லூரிகளில் பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் மற்றும் மீட்பு எண்களான 181, 104, 1098 ஆகிய எண்களை வகுப்பறை மற்றும் சுவரொட்டி மூலம் மாணவிகளிடம் பகிர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT