Published : 13 Dec 2021 06:09 PM
Last Updated : 13 Dec 2021 06:09 PM

எனக்கே பட்டா இல்லை: லெப்.ஜெனரல் அருணின் பதிலால் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் கலகலப்பு

குன்னூர்

எனக்கே பட்டா இல்லை என்ற லெப்.ஜெனரல் ஏ.அருணின் பதிலால் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உதவிய நஞ்சப்ப சத்திரம் மக்களுக்கு ராணுவம் சார்பில் மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியை ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் அப்பகுதி மக்களுக்கு ராணுவம் சார்பில் உணவுப் பொருட்கள் மற்றும் கம்பளிகளை வழங்கினார். அப்போது அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது, ''மிகவும் இக்கட்டான தருணத்தில் நஞ்சப்ப சத்திரம் மக்களின் உதவியை ராணுவம் மறக்காது. உங்களுக்கு ராணுவம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உதவி, நாட்டைக் காக்கும் எங்களுக்கு ஊக்கமும், தைரியத்தையும் அளிக்கிறது.

இந்த உதவிக்கு ராணுவம் சார்பில் உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், உங்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை, ஒவ்வொரு மாதமும் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்படும். வெலிங்டன் ராணுவ மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் வந்து, உங்களைப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள். மருந்துகள் அளிக்கவும் பரிசீலிக்கப்படும். உங்கள் என்ன தேவை எனக் கூறுங்கள், உங்களுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்வோம்'' என்றார்.

‘எனக்கே பட்டா இல்லை’ என்றதும் சிரிப்பலை

உங்கள் கிராமத்துக்கு என்ன தேவை எனக் கேட்டார். அப்போது, வண்டிசோலை ஊராட்சித் தலைவர் மஞ்சுளா சதீஸ்குமார், “தடுப்புச் சுவர், தண்ணீர் வசதி, பட்டா ஆகியவை வழங்க உதவி செய்ய வேண்டும்” எனக் கேட்டார்.

இதைக் கேட்டதும் லெப். ஜெனரல் ஏ. அருண், ”எனக்கே பட்டா இல்லை. பட்டா வேண்டுமென்றால், நானும் வருவாய்த் துறையைத்தான் நாட வேண்டும். பட்டா உட்பட பிரச்சினைகள் குறித்து வருவாய்த் துறையிடம் முறையிட வேண்டும்’’ என்றார். இதைக் கேட்டதும் அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது. இதனால் இறுக்கமான சூழல் மறைந்து, கலகலப்பாக மாறியது.

ராணுவம் சார்பில் குழந்தைகளின் நலனுக்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். பின்னர், விபத்து குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த கிருஷ்ணசாமி மற்றும் சந்திரகுமாருக்கு தலா ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x