Published : 13 Dec 2021 02:03 PM
Last Updated : 13 Dec 2021 02:03 PM

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அடிமை சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் மீது திணிக்கும் சிபிஎஸ்இ: எம்.பி. ஜோதிமணி கண்டனம்

கரூர்

ஆர்எஸ்எஸ்ஸின் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அடிமை சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் மீது திணிக்கிற சிபிஎஸ்இயின் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறோம் என கரூர் காங்கிரஸ் எம்.பி செ.ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் இன்று (டிச.13-ம் தேதி) நடைபெற்றது. கரூர் எம்.பி. செ.ஜோதிமணி முகாமைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வில் ஒரு பாராகிராப் கொடுத்து அதில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இயின் பாராகிராப் மிகப் பிற்போக்குத்தனமானது. பெண்களை அடிமையாக நடத்தக் கூடியது. குழந்தைகளை அதிகாரப்படுத்தச் சொல்லக்கூடிய கற்கால சிந்தனை கொண்டது. சாதாரணத் தொழில் செய்பவர்களை அவமானப்படுத்துகிற மாதிரி அது இருக்கிறது. பெற்றோர்களின் அதிகாரமின்மையே பதின் பருவத்தினரைக் கெடுக்கிறது. வீட்டில் மனைவி கணவருக்குக் கீழ்ப்படிந்திருந்த காலத்தில் தந்தையின் அதிகாரத்தைக் காட்டி குழந்தைகளையும் வேலை செய்பவர்களையும் கீழ்ப்படிந்து வைக்க முடிந்தது. 20-ம் நூற்றாண்டில் இருந்து பெண்ணியச் சிந்தனையால் பெண்கள் கீழ்ப்படிந்திருக்கத் தேவை இல்லாத நிலை ஏற்பட்டதால் பெற்றோரின் அதிகாரம் இல்லாமல் போனது.

மனைவி கணவருக்குக் கீழ்ப்படியாமல் சுதந்திரமாக இருக்கத் தொடங்கியதில் இருந்து குழந்தைகள் மீது இருந்த பெற்றோர்களின் அதிகாரம் தகர்க்கப்பட்டு விட்டது. திருமணமான பெண்கள் இக்காலத்தில் தங்கள் அடையாளங்களை இழந்து, சுயத்தை இழந்து பணியாற்றும் தேவையில்லை. இதனால் தங்கள் கணவருடன் கருத்து முரண்பாடு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, இதனால் குழந்தைகள் இருவருக்கும் பயப்படுவது இல்லை.

கணவரின் அதிகாரம் அகற்றப்பட்டதால் மனைவி, குழந்தைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரத்தை இழந்துவிட்டார். இந்த மாதிரி அதிர்ச்சிகரமான பேப்பரை சிபிஎஸ்இ சர்க்குலேட் செய்திருக்கிறார்கள். பெண்களை அடிமைப் பொருளாக, வெறும் உடலாக, போகப் பொருளாக ஒரு அடிமையாகப் பார்க்கிற ஆர்எஸ்எஸ், பாஜக கற்காலச் சிந்தனையை ஒட்டி இந்த மாதிரி வினாத்தாளை சிபிஎஸ்ஐ வைத்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்குநருக்கு அதனைத் திரும்பப் பெறக்கோரி கடிதம் எழுதியுள்ளேன்.

ஆர்எஸ்எஸ்ஸின் பெண்களுக்கு எதிரான, குழந்தைகளுக்கு எதிரான அடிமை சித்தாந்தத்தைத் திருப்பியும் இந்தியச் சமூகத்தின் மீது திணிக்கிற சிபிஎஸ்இ முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறோம். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்ப உள்ளேன். சிபிஎஸ்இயும், மத்திய அரசும் இந்த 10-ம் வகுப்புத் தேர்வுத் தாளைத் திரும்பப் பெற வேண்டும். குழந்தைகள் மனதில் நஞ்சை விதைப்பது அதுவும் கல்வித் திட்டமே செய்வது மிக மிக மோசமானது.

புதிய கல்விக் கொள்கை என்பது இந்த மாதிரி அழுகிப் போன கற்காலச் சிந்தனைகளையும், பெண்கள், குழந்தைகள், கல்வி முறைக்கு, இந்தியச் சமூகத்தின் நவீனத் தன்மைக்கும் எதிராக இருக்கிற சித்தாந்தத்தைத்தான் புதிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது. புதிய கல்விக் கொள்கையில் என்ன வரப்போகிறது என்பதற்கு முன்னுதாரணமாக இந்த வினாத்தாள் வந்துள்ளதாகக் கருதுகிறேன்.

இதனால்தான் தமிழகம் மற்றும் நாங்களும் கடுமையாகப் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். இதன் மூலம் எங்கள் நிலைப்பாடு சரி என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கற்கால, பெண்ணடிமை, குழந்தைகளை அடிமைப்படுத்துகிற சிந்தனையை ஒருபோதும் இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம்".

இவ்வாறு ஜோதிமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x