Published : 02 Mar 2016 04:18 PM
Last Updated : 02 Mar 2016 04:18 PM

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினர் விரக்தி: தொடர்ந்து கூட்டணிக்கு ஒதுக்குவதால் ஏமாற்றம்

கடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக கூட்டணியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, தோல்வியடைந்த தொகுதிகளில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதால், இந்த தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக தயாராகிவந்த திமுக நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

திமுக கூட்டணியில் கடந்தகால சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வென்ற, தோல்வியடைந்த மதுரை மத்திய தொகுதி, மேலூர், ஓசூர், நிலக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, கிள்ளியூர், குளச்சல் உள்ளிட்ட பெரும்பாலான தங்கள் பாரம்பரியமிக்க தொகுதிகளில் காங்கிரஸ் இந்தமுறை போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் தற்போது போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தயாராகிவந்த திமுக நிர்வாகிகள், எம்எல்ஏ ஆசை கனவாகிவிட்டதால் விரக்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அதிமுகவுக்கு இணையாக திமுகவின் வாக்கு வங்கி உயராமல் இருப்பதற்கு, ஒவ்வொரு முறையும் நியாயம், தர்மம் பார்த்து கூட்டணிக் கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை தொடர்ந்து விட்டுக்கொடுப்பதே முக்கியக் காரணம்.

அரசியலுக்கு வருவதே கவுன்சிலராகி, உள்ளாட்சித் தலைவராகி எம்எல்ஏ ஆவதுதான். ஆனால், ஒவ்வொரு முறையும் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்த தொகுதிகளில், தொடர்ந்து கால் நூற்றாண்டாக திமுகவினர் கவுன்சிலர் பதவியோடு திருப்தி அடைந்துகொள்ள வேண்டியதாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களிலும் நகராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து விடுகிறது. இதனால், இந்த தொகுதிகளில் அதிருப்தியுடன் நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது. தொண்டர்களும், நிர்வாகிகளும் கட்சியை வளர்த்து என்ன பயன்?

கடைசியாக தேர்தலில் இந்த தொகுதிகளில் மாற்றுக்கட்சியினருக்குதான் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அதிமுக கூட்டணியில், அக்கட்சி வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது. அக்கட்சி தொடர்ந்து குறிப்பிட்ட தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் சுழற்சி முறையிலேயே தொகுதிகளை ஒதுக்குகிறது. அதனால், ஒருமுறை இல்லாவிட்டாலும் மறுமுறை அந்த தொகுதிகளில் சுழற்சி முறையில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் எம்எல்ஏ ஆகி அமைச்சரும் ஆகிவிடுகிறார்கள். ஆனால் திமுகவில் அப்படி இல்லை.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் திமுகவை சேர்ந்தவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாததால் விரக்தி அடைந்துள்ளனர். அதனால், கடந்த முறை காங்கிரஸ் மற்றும் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்த தொகுதிகளில், இந்த முறை திமுக போட்டியிட வேண்டும். அதற்கு பதிலாக வேறு சில தொகுதிகளை விட்டுக்கொடுக்கலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x