Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM

நூற்றாண்டுகளை கடந்தும் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் சிறப்புற்று விளங்கும் கோவில்பட்டி: தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி டிச.16-ல் தொடக்கம்

கோவில்பட்டியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் 1920-ம் ஆண்டு முதல் ஹாக்கி விளையாட்டே பிரதானம். இதை தங்களது கிராமத்தின் கவுரவமாக இளைஞர்கள் கருதுகின்றனர்.

கோவில்பட்டியை சேர்ந்த ஜெகன், ராதாகிருஷ்ணன், ராமசாமி, அஸ்வின் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். இலக்குமி ஆலை ஹாக்கி அணி இந்தியா மட்டுமல்லாது மலேசியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று விளையாடி உள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த வீரர்கள் செந்தூர் பாண்டியன், அந்தோணி, இருளாண்டி, ஜெயராமன், ஜோதி, தன்ராஜ், கருப்பசாமி, நவநீதகிருஷ்ணன் போன்றோர் ஜெர்மன், பிரான்ஸ் நாடுகளுக்கு சிறப்பு அழைப்பின் பேரில் சென்று விளையாடி வந்துள்ளனர்.

உலக ஹாக்கியின் தந்தை என்று அழைக்கப்பட்ட மேஜர் தயான் சந்த் 1952-ம் ஆண்டு கோவில்பட்டி வ.உ.சி. அரசு பள்ளி மைதானத்தில் நடந்த கோடைகால ஹாக்கி சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று, வீரர்களுக்கு பயிற்சி வழங்கினார். தற்போது கோவில்பட்டியில் டிச.16-ல் தொடங்க உள்ள தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 9 பேர் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சங்கத் தலைவர் சேகர் ஜே.மனோகரன் கூறியதாவது:

ஹாக்கியையும், கோவில்பட்டி யையும் பிரிக்க முடியாது. அந்தளவுக்கு திறமையான வீரர்கள் உள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன், இங்குள்ள விளையாட்டு விடுதியில் பயின்ற கார்த்தி ஆகியோர் தமிழ்நாடு ஜூனியர் அணிக்கு தேர்வாகி தற்போது தமிழ்நாடு சீனியர் ஹாக்கி அணியில் விளையாடி வருகின்றனர்.

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஹாக்கி திடல் அமைக்க கனிமொழி எம்.பி., முயற்சி எடுத்து வருகிறார் என்றார்.

தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் சி.குருசித்ர சண்முக பாரதி கூறும்போது, ‘‘ கோவில்பட்டியை சேர்ந்த மருத்து வர் துரைராஜ் தான் இங் குள்ள வீரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட அனுமதி பெற்றுத் தருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

பசுவந்தனை சாலையில் ஹாக்கி மைதானத்தை உருவாக்கினார். ஆசியாவிலேயே மிகச்சிறந்த மண் மைதானமாக அது திகழ்ந்தது.

ஹாக்கி விளையாட்டின் மூலம் கோவில்பட்டியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேசிய மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்கள் அளவில் ஹாக்கி விளையாடி உள்ளனர்.

2017-ம் ஆண்டு கோவில்பட்டி யில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது முதல்முறையாக கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடக்க உள்ளது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.

இப்போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட முதன்முறையாக கோவில்பட்டியை சேர்ந்த 9 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மாணவிகளும் ஹாக்கி போட்டி களில் பங்கேற்று திறமையை நிரூபித்து வருகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x