Published : 12 Dec 2021 06:38 PM
Last Updated : 12 Dec 2021 06:38 PM
தலைமைச் செயலக இடத்தில் வாடகையின்றி ஹோட்டல், டீக்கடைகள் நடத்த அனுமதி தந்துள்ளதுடன் லாபத்தில் பங்கு என ஒப்பந்தம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக உரிமம், உணவுப் பாதுகாப்புத்துறை உரிமம் இல்லாமல் நடத்துவதும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் வடக்குப் புறம் லே-கபே செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் ஊழியர்களுக்கான கேன்டீன் என்ற பெயரில் தலைமைச் செயலகத்தின் உள்புறம் ஒரு கேன்டீன் திறக்கப்பட்டது. பின்பு சில நாட்களில் நடைபாதை முழுவதும் சைவ-அசைவ உணவகம், டீக்கடை என ஒவ்வொரு கடையாகச் செயல்படத் தொடங்கியது.
இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்ற ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அதை ஆளுநர், முதல்வரிடம் இதுகுறித்து புகாராகத் தந்துள்ளார்.
அந்த மனு விவரம்:
''புதுச்சேரி தலைமைச் செயலக இடம் கடந்த 27.06.2019 முதல் புதுச்சேரி அசோக் ஹோட்டல் கார்ப்பரேஷனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடகை எதுவும் வசூலிக்கப்படுவதில்லை, லாபத்தில் பங்கு என்கிற ஒப்பந்த அடிப்படையில் இடம் தந்துள்ளதாகத் தலைமைச் செயலக அதிகாரிகள் தகவல் தந்துள்ளனர். இந்தக் கடைகள் தலைமைச் செயலக இடத்திலும் பிரெஞ்சு தூதரகம் எதிரேயும் அமைந்துள்ளன.
புதுச்சேரி கடற்கரைக்கு வெளிமாநிலச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில் உச்சகட்டப் பாதுகாப்பில் உள்ள பிரெஞ்சு தூதரகம் எதிரே எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத இதுபோன்ற உணவகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
தலைமைச் செயலக வளாகத்தில் லாபத்தில் பங்கு அடிப்படையில் உணவகம் நடத்த ஒப்பந்தம் செய்துக்கொள்ளத் தலைமைச் செயலகம் என்ன சுற்றுலா பயணியர் விடுதியா என்ற அடுத்த கேள்வியும் எழுகிறது. தலைமைச் செயலகம் என்பது புதுச்சேரியில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். இந்நிலையில் தலைமைச் செயலகத்தின் ஒருபுறம் புத்தர் சிலை அமைத்துவிட்டு, மறுபுறம் அசைவ உணவகத்திற்கு அனுமதி அளித்துள்ளது தலைமைச் செயலகத்தின் மாண்பையே குலைத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் புதுச்சேரி அசோக் ஹோட்டல் நிர்வாக இயக்குநர், அரசு செயலர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், தலைமைச்செயலக வளாகத்தில் இயங்கும் ஹோட்டல்களுக்கு வர்த்தக உரிமம், உணவுப் பாதுகாப்புத்துறை உரிமம் ஆகியவை இல்லை. மேலும் ஒப்பந்தத்தில் கடைகள் நடந்த அளவீடுகள் இல்லை. அத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஹோட்டல் அசோக் தரப்பானது விருப்பம் போல் மேல் வாடகைக்குக் கடைகளை விட்டுள்ளன. இச்சூழலில் தலைமைச் செயலகத்திலுள்ள ஊழியர்களுக்கான கேன்டீன் மூடப்பட்டு அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT