Published : 12 Dec 2021 05:41 PM
Last Updated : 12 Dec 2021 05:41 PM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம், மாநகராட்சி மண்டலம் 4-வது வார்டுக்கு உட்பட்ட கஸ்பா பிள்ளையார் கோயில் தெருவில் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் நிதி திட்டம் மற்றும் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.108 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்துப் பேசியதாவது:
''இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுப் பல்வேறு வசதிகளுடன் கூடிய சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற சமுதாயக் கூடத்தைத் தமிழகத்தில் வேறு எங்குமே நான் பார்த்தது இல்லை.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மேம்படுத்தப்படாத பணிகளைத் தமிழக அரசு விரைவாக முன்னெடுத்துச் செல்லும். வேலூர் மாவட்டத்தின் அடையாளச் சின்னமாக கோட்டை விளங்கி வருவதால் அதைச் சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுத்து, வேலூர் கோட்டை சிறந்த கோட்டையாகச் சீர்திருத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் பல சாலைகள் சேதமடைந்துள்ளன. இச்சாலைகளைச் சீர் செய்ய வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தேன். எனவே, சேதமடைந்த சாலைகளை விரைவாகச் சீர்செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக சாலைகளைச் சீர்செய்ய வேண்டும்.
வேலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிரீன் சர்க்கிள் பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும்''
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, காட்பாடி, விருதம்பட்டு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, காட்பாடி அடுத்த கீரைச்சாத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஜி.ஆர்.குப்பம் பகுதியில் அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.2.70 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
''தமிழகத்துக்கு நான் அமைச்சர். காட்பாடி தொகுதிக்கு நான் எம்எல்ஏ., என்பதால் தொகுதி மக்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை என்னிடம் தெரிவிக்கலாம்.
தொகுதிப் பிரச்சினைகளைத் தெரிவித்தால் விரைவில் அவை சீர் செய்யப்படும். நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே தொகுதிப் பிரச்சினைகளை மக்கள் என்னிடம் தெரிவிக்கலாம். இங்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான முழுத் தொகையைப் பயனாளிகளுக்கு அதிகாரிகள் வழங்க வேண்டும். பயனாளிகளிடம் கையூட்டு பெறுவது, இத்திட்டத்தில் முறைகேடு செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அதிகபட்ச நடவடிக்கையை எடுப்பேன்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்த வேண்டும். கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்கின்றனவா? கிராம மக்களுக்குத் தேவையான திட்டங்கள் என்ன என்பதை அறிந்து என்னிடம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்வதுடன் அதற்கான நிதியும் பெற்றுத் தருவேன்''.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT