Published : 12 Dec 2021 04:53 PM
Last Updated : 12 Dec 2021 04:53 PM

அரசு உயரதிகாரிகளின் சொத்து விவரம்; ஆன்லைனில் பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்: விஜயகாந்த் 

சென்னை

அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் வெளியிட்ட பதிவு:

''தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் வாங்கிய அசையா சொத்துகள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வருகிற ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளது வரவேற்கதக்கது.

இதுபோன்ற செயல் வெளிப்படைத் தன்மையையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும், கொண்டுசெல்ல வழிவகுக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் என்பவர்கள் நாட்டை வழிநடத்தும் உயர்ந்த பதவிகளில் பணியாற்றுகிறார்கள், அவர்களே வெளிப்படைத் தன்மையோடு தங்களை அடையாளபடுத்திக் கொண்டால், அவர்களுக்குக் கீழ் செயல்படும் மற்ற அதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.

இந்த நடைமுறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்ட தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு தேமுதிக சார்பில் நன்றி. இந்த நடைமுறை பெயரளவிற்கு இல்லாமல் இதில் விடா முயற்சியுடன், கண்டிப்புடன் செயல்பட்டால் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகம் அமைவதில் ஐயம் இல்லை''.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x