Published : 12 Dec 2021 04:12 PM
Last Updated : 12 Dec 2021 04:12 PM

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்: நஞ்சப்ப சத்திரம் பகுதி சீல்

விபத்து நடந்த பகுதியிலிருந்து ஹெலிகாப்டரின் பாகங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட விமானப் படையினர்.

குன்னூர்

குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விபத்து நடந்த இடத்திலிருந்து ஹெலிகாப்டரின் பாகங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நஞ்சப்ப சத்திரம் பகுதியை விமானப் படையினர் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணைக் குழுவினர் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் விமானப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களைத் தவிர மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஏர்மார்‌ஷல் மன்வேந்திர சிங், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஸ்வர் சிங், நீலகிரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளில் வருவாய்த் துறையினர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து முப்படைகளின் வீரர்களும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களைச் சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு வனத்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் மரங்களை வெட்டி உதவி செய்கின்றனர்.

மேலும் சேகரித்த உதிரி பாகங்களைப் பாதுகாப்புடன் உடைக்க வெல்டிங் எந்திரங்களும் கொண்டு வரப்பட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், ராணுவ வீரர்கள் கொண்டுவந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. பிஸ்டல் மற்றும் அதனை லோடு செய்யப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை விமானப் படையினர் சேகரித்தனர். எரிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் துப்பாக்கிகள் எரிந்த நிலையில் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் நீலகிரி மாவட்டத் தீயணைப்புப் துறை உதவி மாவட்ட அலுவலர் நாகராஜன், குன்னூர் தீயணைப்பு அலுவலர் மோகன் ஆகியோரிடம் விபத்து நடந்த பகுதிக்கு முதலில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீக்காயத்துடன் மீட்கப்பட்டவர்கள், இறந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

விபத்து நடந்த இடத்தில் உயர் அழுத்த மின் கம்பி இருந்ததா? சேதமாகி உள்ளதா? என்பது குறித்து அறிய மின்வாரியத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் வானிலை நிலவரம் எப்படி என்பது குறித்து தகவல் அளிக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கும் விசாரணைக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு அதனை வீடியோ எடுத்த நாசரின் செல்போனைப் பறிமுதல் செய்து, அதனை கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முடிந்ததும் விசாரணையைத் தீவிரப்படுத்த தமிழகக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் வருவாய்த் துறையினர், வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விபத்து நடைபெற்றபோது கிராமங்களில் எத்தனை நபர்கள் இருந்தனர், அவர்களின் பெயர் மற்றும் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x