Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை: சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

வேப்பம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

திருவள்ளூர்

தமிழகத்தில் இதுவரையில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரை அடுத்த 26 வேப்பம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்கரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு வந்தவர்களிடம் தடுப்பூசி விவரங்களை கேட்டறிந்ததோடு, கட்டாயம்முகக்கவசம் அணியவும் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர், ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா நோய் தொற்றைத் தடுக்க தடுப்பூசிதான் பேராயுதமாகும். எனவே, தடுப்பூசி செலுத்தாதவர்கள் கட்டாயம் தாமாகாவே முன்வந்து செலுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று தடுப்புப் பணியில் பல்வேறு துறையினர் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 5.78 கோடி பேர் உள்ளனர். இதில் 4.07 கோடி பேர் முதல் தவணையும், 2.38 கோடி பேர் 2-வது தவணையும் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.08 கோடி பேர் முதல்தவணையும், 94.15 லட்சம் பேர்இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அலட்சியம் காட்டக் கூடாது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 81.04 சதவிதம், இரண்டாவது தவணை 47.03 சதவிதம் செலுத்தி தமிழகத்தில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் டெல்டா வைரஸ் தாக்கம் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில், ஒமைக்ரான் பாதிப்பு 50 உருமாற்றங்களில் உள்ளது. ஆனால், இதுவரையில் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்பது வரவேற்புக்கு உரியதாகும்.

தமிழகத்தில் பொது இடங்களில் 65 சதவீதம் பேர், 20 பேர்கள் கொண்ட மூடிய அறைகளில் 85 சதவீதம் பேர் வரையில் முகக்கவசம் அணிவதில்லை. இதுபோன்ற செயல் அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அதனால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்த முகாமில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜவஹர்லால், சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x