Last Updated : 15 Mar, 2016 09:14 AM

 

Published : 15 Mar 2016 09:14 AM
Last Updated : 15 Mar 2016 09:14 AM

திரிக்கப்பட்ட ‘கயிறு’கள்.. சாயம் வெளுத்த செய்திகள்

கடந்த 4 மாதங்களாக தமிழக அரசியலை உலுக்கி வந்த கூட்டணி களேபரம் ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய 5 அணிகள் உறுதியாகி விட்டன. பாஜக, தமாகா மற்றும் இதர கட்சிகள் இந்த ஐந்தில் ஏதாவது ஒரு அணியில் இடம்பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த 5 அணிகள் முடிவாவதற்கு முன்பாக கடந்த 4 மாதங்களாக தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை உருவாக்கிய கட்சி தேமுதிக என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தேமுதிகவை சுற்றியே அரசியல் விமர்சனங்கள், யூகங்கள் ஆகியவை செய்திகளாக வெளிவந்தன. கடந்த நவம்பரில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த நாள் முதல் இந்த பரபரப்பு தொடங்கியது. அதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி, தங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்படி விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தார். இதன்பிறகு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி சாயம் வெளுத்த செய்திகள் எவை தெரியுமா?

ஜனவரி 2: கூட்டணியில் சேர்ந் தால் துணை முதல்வர் பதவி தருவ தாக திமுக ஒப்புக் கொண்டுள்ளது என்று மக்கள் நல கூட்டணி தலை வர்களிடம் விஜயகாந்த் தெரிவித்துள் ளார். (ஒரு ஆங்கில நாளிதழ்)

பிப்ரவரி 2: ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுக வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவி கேட்க மாட்டோம் என்று தேமுதிக தரப்பில் தெரிவித்து விட்டனர். ஆனால், மேயர் மற்றும் உள்ளாட்சி பதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். (ஒரு ஆங்கில நாளிதழ்)

பிப்ரவரி 4: அமித்ஷாவை டெல்லி யில் நாளை (பிப்.5) விஜயகாந்த் ரகசியமாக சந்தித்து பேசவுள்ளார். (ஒரு மாலை நாளிதழ். இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

பிப்ரவரி 9: விஜயகாந்தின் மைத் துனர் சுதீஷ் டெல்லியில் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்து கூட்ட ணியை உறுதி செய்துள்ளார். திமுக, பாஜக, தேமுதிக கூட்டணி உறுதியாகி உள்ளது. (ஒரு மாலை நாளிதழ்)

பிப்ரவரி 20: தேமுதிக, மதிமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்க விஜயகாந்த் முயற்சி எடுத்து வருகிறார். (ஒரு மாலை நாளிதழ்)

மார்ச் 2: பாஜகவுடன் கூட்டணி யில் சேருவதற்கு 130 இடங்கள் ஒதுக்க வேண்டும். மேலும் என்னை முதல்வர் வேட்பாளராக அறி விக்க வேண்டும். எனது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு மாநிலங் களவை எம்பி பதவி வழங்க வேண் டும் என்று விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (ஒரு ஆங்கில இணைய தள செய்தி)

மார்ச் 3: விஜயகாந்துடன் தயாநிதி மாறன் தீவிரமாக பேரம் நடத்தி வருகிறார். திமுகவிடம் 100 இடங்களை விஜயகாந்த் கேட்டார். இறுதியில் 59 இடங்களுக்கு ஒப்புக் கொண்டு விட்டார். விஜயகாந்தின் அதிர்ஷ்ட எண் ‘5’ என்பதால் 59 என்ற எண்ணிக்கை முடிவாகி உள்ளது. ஆட்சியில் பங்கு கோரிக்கையை கைவிட்டு, திமுக வெற்றி பெற்றதும் மேயர் பதவி மற்றும் உள்ளாட்சி பதவிகளை வழங்கினால் போதும் என்று தெரிவித்துள்ளார். (ஒரு பிரபல ஆங்கில நாளிதழ்)

மார்ச் 3: திமுக - தேமுதிக இடையே கூட்டணி முடிந்து விட்டதை அறிந்த இரண்டு கட்சி தொண்டர்களும் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். (ஒரு பிரபல ஆங்கில நாளிதழ்)

மார்ச் 8: தேமுதிக - திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு கருணா நிதி அளித்த பதில்: பழம் கனிந்து கொண்டிருக்கிறது. அது பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை.

மார்ச் 10-ம் தேதி நடந்த தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் பேசிய விஜயகாந்த், தனித்துப் போட்டி என்று அறிவித்ததுடன், ‘நான் யாருடனும் கூட்டணி பேரம் பேசவில்லை மக்களே’ என்று கூறி, அனைத்து செய்திகளின் சாயத்தையும் வெளுக்க வைத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x