Published : 11 Dec 2021 05:19 PM
Last Updated : 11 Dec 2021 05:19 PM
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்ப சத்திரம் பகுதியில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என குன்னூர் பகுதி மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என குன்னூர் பகுதி மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
கையெழுத்து இயக்கத்தை நடத்தி வரும் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத் தலைவர் வினோத் கூறும் போது, ''வெலிங்டன் ராணுவ முகாம் மிகவும் பழமையானது மற்றும் பாரம்பரியமானது. இங்குள்ள ராணுவ மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது நினைவாக வெலிங்டன் ராணுவ முகாமுக்குச் செல்லும் பகுதி மானெக்ஷா பாலம் எனப் பெயரிடப்பட்டு, முகப்பில் அவரது 5 அடி சிலை நிறுவப்பட்டுள்ளது.
மேலும், ராணுவ மருத்துவமனை நுழைவுப் பகுதியில் கிறிஸ்டல் கற்களால் அவரது உருவப் படம் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோலக் கடந்த 1982-ம் ஆண்டு ராணுவ மையம் அருகேயுள்ள கம்பிசோலை பகுதியில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. அதன் நினைவாக போர் நினைவுச் சின்னம் பகுதியில் விபத்துக்குள்ளான விமான மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி, அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நினைவுச் சின்னம் பிபின் ராவத் பெயரில் அமைக்க வேண்டும்.
மேலும், விபத்து நடந்த பகுதி அருகில் காட்டேரி பூங்கா மற்றும் ரன்னிமேடு ரயில் நிலையம் ஆகியவை உள்ளன. இவற்றுக்கு உயிரிழந்த அதிகாரிகளின் பெயர்களைச் சூட்ட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடன் கையெழுத்து பெற்று, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT