Published : 11 Dec 2021 04:59 PM
Last Updated : 11 Dec 2021 04:59 PM
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், புதுச்சேரியில் நிச்சயமாக அடுத்த வாரம் அனைவருக்கும் மழை நிவாரணம் கிடைக்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2021-22 பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரத்யேகமாகப் பெண்களுக்கென சனிக்கிழமைகளில் போக்குவரத்துத் துறையில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் கூடுதல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்திருந்தார்.
இதையொட்டி பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பச் செயல்பாட்டில் நேர முன்பதிவு வசதியை போக்குவரத்துத் துறை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதி மூலம் பெண்கள் பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான காலத்தேர்வைத் தாங்களே தேர்வு செய்துகொள்ள முடியும்.
இந்தச் சிறப்பு ஏற்பட்டின் முதற்கட்டமாக, புதுச்சேரி நூறடி சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை வளாகத்தில் பெண்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குப் பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு இன்று (டிச.1) நடைபெற்றது.
இதனை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார், எம்எல்ஏ சம்பத், போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
‘‘ஓட்டுநர் உரிமம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அது இல்லையென்றால் சில சங்கடங்கள் ஏற்படும். ஓட்டுநர் உரிமம் இருந்தால் விபத்து ஏற்பட்டு இழப்பீடு வாங்கும்போது சங்கடங்கள் இல்லாமல் இருக்கும். எனவே, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் மிக மிக அவசியம். பெண்களுக்கு அவசியம் இருசக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிய வேண்டும்.
அரசுப் பணியிடங்களை மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பதே எண்ணம். மதிப்பெண் அடிப்படையிலேயே இதுவரை அரசுப் பணியிடங்களை நிரப்பி வந்துள்ளேன். இப்போதும் அப்படியேதான் நிரப்புகிறேன். எங்கள் அரசு சொன்னதைச் செய்யக்கூடிய அரசாகத்தான் இருக்கும்.
சட்டப்பேரவையிலும், தேர்தலிலும் சொன்னதைக் கண்டிப்பாகச் செய்வோம். ஆட்சிக்கு வந்து 6 மாதம் ஆகிவிட்டது, என்ன செய்தீர்கள் என்று சிலர் கேட்கலாம். ஆனால், நாங்கள் ஒவ்வொன்றாகச் செய்து வருகிறோம். மழை நிவாரணம் அறிவித்துவிட்டுக் கொடுக்கவில்லை என்று ஒருசிலர் கேட்கிறார்கள்.
அறிவித்தவுடனே நிவாரணம் கொடுக்க முடியுமா? நிச்சயமாக அடுத்த வாரம் அனைவருக்கும் மழை நிவாரணம் கிடைக்கும். இது தொடர்பாகக் கோப்பு ஒப்புதலுக்குச் சென்றுள்ளது. அடுத்த வாரம் நிவாரணம் கிடைப்பதற்குரிய நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
நாங்கள் சொன்னதைக் கண்டிப்பாகச் செய்வோம். அதற்கு மத்திய அரசும் உதவியாக இருக்கும். பிரதமருக்குப் புதுச்சேரி மீது மிகுந்த அக்கறை உண்டு. புதுச்சேரிக்குச் செய்து கொடுக்க வேண்டிய எண்ணம் மத்திய அரசுக்கு உள்ளது. அதற்குரிய நிலையில் என்னென்ன திட்டங்களைக் கொண்டுசெல்ல முடியுமோ, அந்தத் திட்டங்களை எல்லாம் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
அந்தத் திட்டங்களுக்குரிய நிதியைப் பெற்று மத்திய அரசின் ஒத்துழைப்போடு புதுச்சேரியைச் சிறந்த மாநிலமாகக் கொண்டுவருவோம். அதேபோல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் எண்ணம். பிரதமரிடமும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.’’
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.
அமைச்சர் சந்திர பிரியங்கா பேசும்போது, ‘‘புதுச்சேரியில் இதுவரை 4 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார்கள். அதில் 16 ஆயிரம் பெண்கள் மட்டுமே வாகன உரிமம் பெற்றுள்ளனர். ஆனால், வாகனம் ஓட்டும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். வாகன உரிமம் இல்லாததால் விபத்து ஏற்படும்போது இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியவில்லை.
எனவே, அனைத்துப் பெண்களும் வாகன உரிமம் பெற வேண்டும். மேலும், பிஆர்டிசி கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் பிஆர்டிசியில் இருந்து சில பிரச்சினைகளைத் தீர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சமாக இருந்த வருவாயை ரூ.4 லட்சமாக உயர்த்தியுள்ளோம். இது எங்களுடைய முன்னேற்றத்திற்கான முதல் படி’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT