Published : 11 Dec 2021 02:13 PM
Last Updated : 11 Dec 2021 02:13 PM

மதுரை மேம்பால விபத்து: விரிவான ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது நிபுணர் குழு

பிரதிநிதித்துவப் படம்

மதுரை

ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த மதுரை மேம்பால விபத்து தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் நிபுணர் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை புதுநத்தம் சாலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டி குளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டன. 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகளை முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்த நிலையில், மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்புப் பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி மாலை இடிந்து விபத்திற்கு உள்ளானதில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.

பாலத்தின் இரண்டு புறமும் நகருக்குள் செல்பவர்களுக்காகக் கட்டப்படும் 335 மீட்டர் நீளமுள்ள ஒரு சர்வீஸ் பாலத்தில் நாராயணபுரம் அருகே விபத்து ஏற்பட்டது. இந்த சர்வீஸ் பாலம் கட்டுவதற்கு 35 மீட்டர் இடைவெளியுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே 35 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் ஒரு பகுதியை, பேரிங் வைத்து இணைப்பதற்கு, ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் பாலத்தைத் தூக்கியுள்ளனர், அப்போது ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக இதுவரை மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஜேஎம்சி புராஜெக்ட்ஸ் (JMC projects) இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப் பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தரப்பு விளக்கம் கேட்கப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் எனப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்,

அதன்படி, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 3 வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவில், கேரளாவைச் சேர்ந்த NATPAC என்ற கட்டுமான நிறுவனத்தின் போக்குவரத்து நுட்பப் பொறியாளர் சாம்சன் மாத்தீவ் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மேம்பாலக் கட்டுமான ஆலோசகர் அலோக் போமிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆக.30 அன்று திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் பாஸ்கர் மட்டும் நாராயணபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வைப் பொறியாளர் உள்ளிட்ட நபர்களிடம் விபத்திற்கான காரணங்கள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த செப்.4-ம் தேதி நிபுணர் குழுவினர் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனத்தார், திட்டப் பொறியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஹைட்ராலிக் இயந்திரத்தின் பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்தவர்கள் மற்றும் மேம்பாலப் பணிகளுக்காகப் போடப்பட ஒப்பந்த அறிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில், இன்று அதற்கான விரிவான ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் நிபுணர் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்,

அதில், "ஹைட்ராலிக் பளு தூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விபத்திற்குக் காரணம், மேலும், பாலத்தில் கர்டர் பொருத்தும் பணிகளில் கூடுதல் அனுபவம் இல்லாத தொழிலாளர்களைப் பயன்படுத்தியது, கர்டர் பொருத்தும் பணியின்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புப் பொறியாளர்கள் இல்லாததும் விபத்திற்குக் காரணம்

கர்டர் பொருத்தும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும், கட்டுமான முறையில் மாற்றம் செய்ய வேண்டும், முதலில் கர்டர் பொருத்திவிட்டு, பின்னர் கர்டரின் இரு புறமும் தூண்களின் மேல் இணைப்புச் சுவர் கட்டப்படும், இனி முதலில் இணைப்புச் சுவரைக் கட்டிவிட்டு பின்பு கர்டர் பொருத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், இந்த நடைமுறையைச் செயல்படுத்துவது குறித்து சோதனை செய்து தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் நிபுணர் குழு ஒப்புதல் பெற்றுப் பணிகளைத் தொடங்க வேண்டும்,

பாலம் விபத்து தொடர்பாக 6 கண்காணிப்புப் பொறியாளர்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்ததாரர்களிடம் அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதத்திற்குள் கட்டுமான நடைமுறை மாற்றம் குறித்த பரிசோதனை ஒப்புதல் பெற்று விபத்து நடைபெற்ற பாலத்தின் பணிகள் தொடங்கப்படும். இந்த அறிக்கையின் மூலம் விபத்திற்குக் காரணமாக உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என நிபுணர் குழு ஆய்வின்போது தெரிவித்திருந்த நிலையில், தற்போது மூன்று மாதங்கள் கழித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x