Last Updated : 31 Mar, 2016 08:40 AM

 

Published : 31 Mar 2016 08:40 AM
Last Updated : 31 Mar 2016 08:40 AM

ஒரு மாதத்துக்குப் பிறகு நடவடிக்கை: மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய 6 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு - மவுனம் சாதிக்கும் மதுவிலக்கு கோரும் கட்சிகள்

திருச்சியில் கடந்த மாதம் நடை பெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்களில் 6 பேர் மீது, மாநாடு நடந்து முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மது விலக்குக்காக குரல் கொடுக்கும் கட்சிகள் ஏனோ இதுவரை கருத்து தெரிவிக்காமல் மவுனம் சாதிக் கின்றன.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ‘மக்கள் அதிகாரம்‘ அமைப்பின் சார்பில் மது ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. மது ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியம், மதுவால் குடும்பத்தில்- சமூகத்தில்- பாரம்பரியத்தில் ஏற் படும் மற்றும் ஏற்பட்டுள்ள பாதிப்பு கள், மனநல பாதிப்பு, சட்டம்- ஒழுங்கு நிலைமை, சாலை விபத்து களில் மதுவின் பங்கு ஆகியன குறித்து இம்மாநாட்டில் எடுத்துரைக் கப்பட்டது.

மேலும், மதுவால் நேரடியாக வும், மறைமுகமாகவும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தவர் கள், வாழ்க்கையை, கல்வியை இழந்தவர்கள் தங்கள் அனுபவங் களை எடுத்துரைத்தனர். தவிர, மதுவை ஒழிப்பதன் அவசியத்தை விளக்கி நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவன் பாடல் பாடினார். குறிப் பாக, மதுவிலக்கை வலியுறுத்தி, வாள்வீச்சு தேசிய சாம்பியனான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் ராஜ், மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வாள்வீச்சு போட்டிகளில் தான் பெற்ற அனைத்து சான்றிதழ்களையும் கிழித்தெறிந்தார்.

இந்நிலையில், மாநாடு முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு கடந்த 26-ம் தேதி மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ, நிர் வாகக் குழு உறுப்பினர் காளியப் பன், வாள்வீச்சு வீரர் டேவிட் ராஜ், சென்னை ஆனந்தியம்மாள், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், டாஸ்மாக் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகிய 6 பேர் மீது, இந்திய தண் டனைச் சட்டம் 124-A, 504 மற்றும் 505 (1) (b) ஆகிய பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில், தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு செய்து 4 நாட்களாகியும், மதுவிலக்கு குறித்து தொடர்ந்து பேசிவரும் எதிர்க்கட்சிகள் எதுவும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இத னால், இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்ட பிறகு கருத்து அல் லது கண்டனம் தெரிவித்தால்தான் மக்கள் மத்தியில் பெயர் கிடைக்கும் என்று நினைக்கின்றனரா அல்லது தேர்தலுக்காக மதுவிலக்கு முழக்கத்தை எழுப்பி வருகின்றனரா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

அச்சுறுத்தும் நடவடிக்கை

இதுதொடர்பாக மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூவிடம் கேட்டபோது அவர் கூறியது:

மாநாடு முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு எதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தெரியவில்லை. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உண்மையான நோக்கில் போராடுபவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை இது.

தேச துரோக வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாட்டில் விவாதம் எழுந்துள்ள நிலையில், கோவன் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைக்காக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது கண்டிக்கத் தக்கது. இந்த வழக்கை நாங்கள் சந்திக்கத் தயாராகவே உள்ளோம்.

மதுவிலக்குக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கட்சிகள், இதுகுறித்து இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை. போராடும் மக்கள், அமைப்புகள் மீது அடக்குமுறையைச் செலுத்தி ஒடுக்க நினைக்கிறது போலீஸ். மாநாட்டின் கோரிக்கை குறித்து பரிசீலிக்காமல் அந்தக் கோரிக்கை மீண்டும் எழாமல் இருப்பதற்காக ஒடுக்கவும், எச்சரிக்கவும், அச்சுறுத்தவுமே வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x