Published : 10 Dec 2021 03:48 PM
Last Updated : 10 Dec 2021 03:48 PM

கொளத்தூரில் மழை பாதிப்பு: நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கோப்புப் படம்

சென்னை

கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்தத் தொகுதியான கொளத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசால் போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்புகள் விரைவாக சீர்செய்யப்பட்டன. மேலும், தமிழக முதல்வர், கனமழை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (10.12.2021) கொளத்தூர், திரு.வி.க. மண்டலத்தைச் சேர்ந்த சபாபதி தெருவில் 23.11.2021 அன்று இரண்டு மாடிக் குடியிருப்பு வீட்டின் முதல் தளம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஜெயலட்சுமி, சுதா, மோகனா ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று, நிதியுதவி வழங்கி, உடல்நலம் குறித்து விசாரித்து, ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வள்ளியம்மை தெருவில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களது தேவைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள், வெள்ளத் தடுப்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தேங்கிய மழை நீரை விரைவாக அகற்றியதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் தொடர்பான பிரச்சினையைச் சீர்செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையைத் துரிதமாகச் செயல்படுத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், ஜி.கே.எம். காலனி 11-வது தெருவில் முதல்வர் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், சிவ இளங்கோ சாலையில் உள்ள வண்ணான்குட்டையைப் பார்வையிட்டு, குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், கொளத்தூர், வெங்கடேஸ்வரா நகரிலுள்ள ஸ்கை மஹால், லஷ்மணன் நகர், அக்பர் சதுக்கம் மற்றும் ஜெயராம் நகர் 1-வது பிரதான சாலை ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்."

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x