Published : 10 Dec 2021 01:26 PM
Last Updated : 10 Dec 2021 01:26 PM

பல்கலைக்கழகங்கள் மூலம் தேசிய கல்விக் கொள்கையைத் திணிக்க முயற்சி: வேல்முருகன் கண்டனம்

கோப்புப் படம்

சென்னை

தேசிய கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழக மானியக்குழு மூலம் செயல்படுத்த முயலும் மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அக்கல்விக் கொள்கையைச் செயல்படுத்தப் பல்கலைக்கழக மானியக்குழு மூலம் மத்திய அரசு முயற்சி செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் இத்தகையை நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

எந்தவித ஜனநாயகப் பண்பையும், மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லாத மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ, அரசின் கொள்கையாக 29.07.2020 அன்று அறிவித்திருந்தது.

இக்கல்விக் கொள்கை என்பது, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமஸ்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்கு தடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணானது என்று அப்போதே தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

மேலும், மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய நீட் தேர்வு இருப்பது போல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கெனத் தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில், தேசியத் தேர்வு ஆணையம் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தேசிய கல்விக் கொள்கையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கல்வித் தொண்டர்கள் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும், அற நிறுவனங்கள், அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் மோசமான திட்டமும் இக்கல்விக் கொள்கையில் இருக்கிறது என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்த மத்திய அரசு தீவிர முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதற்காகப் பல்கலைக்கழக மானியக்குழு வாயிலாக, கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கைகள் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம், தேசிய கல்விக் கொள்கையின் பல பரிந்துரைகளைத் தனியார் பல்கலைக்கழகங்கள், சுய நிதிக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சுற்றறிக்கையை, தமிழ்நாடு அரசோ, உயர்கல்வித் துறையோ, அரசுப் பல்கலைக்கழகங்களோ கண்டுகொள்ளாவிட்டாலும் கூட, தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கின்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. உயர் கல்வி நிலையங்களை சர்வதேசமயமாக்கும்போது இங்குள்ள பேராசிரியர்கள் தங்களின் பணியை இழக்க நேரிடும்.

கல்வி அதிகாரத்தை மாநிலங்களுக்குத் திரும்ப அளித்து, கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை முடிவு.

எனவே, தேசிய கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழகங்கள் அமல்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசு உத்தரவிடுவதோடு, சுயநிதிக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்தும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது."

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x