Published : 10 Dec 2021 03:09 AM
Last Updated : 10 Dec 2021 03:09 AM

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திருடிய பணத்துடன் தப்பிய திருடர்களை விரட்டி சென்று பணத்தை மீட்ட பெண் காவலர்

பெண் காவலர் ஜீவிதா.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரசா இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் (60). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர். இவர் வீட்டின் கட்டுமான பணிக்காக சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் உள்ள வங்கியில் ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் பணியாற்றும் சகோதரரை சந்திக்க நேற்று காலை வந்தார். பணம் இருந்த பை அவரது இரு சக்கர வாகன சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் இருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் அகஸ்டின் வாகனத்தில் இருந்த பணப் பையை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.

இதைக்கண்ட அகஸ்டின் கூச்சலிட்டார். அப்போது பொது மக்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்தா காவலர்கள் விரட்டிச் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே சென்றதும் பின்தொடர்ந்து வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி மூவரும் தப்பினர். இவர்களது வாகனம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழி யாகச் சென்றது. அங்கு பாதை இல்லாத தால் மீண்டும் திரும்பியவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றனர்.

அந்த நேரத்தில் ஆட்சியர் அலுவலக பெண் காவலர்கள் அந்த மூன்று பேரையும் மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களை ஏமாற்றிச் செல்ல முயன்றபோது ஜீவிதா என்ற பெண் காவலர் வாகனத்தில் கடைசியாக இருந்த நபரை விரட்டிச்சென்று பிடித்தார். இதில், சுதாரித்துக்கொண்ட அந்த நபர் ஜீவிதாவின் கையை தட்டிவிட்டு பணப்பையை சாலையில் வீசினார். அந்தநேரத்தில், அந்த மர்ம நபரின் செல்போனும் கீழே விழுந்தது.

விரட்டிவந்த காவலரை திசை திருப்பிவிட்டு மர்ம நபர்கள் மூன்று பேரும் சத்துவாச்சாரி வழியாக மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

பின்னர் பணப்பை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தப்பிய நபர்கள் விட்டுச்சென்ற செல்போனைவைத்து மூன்று பேரையும் கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x