Published : 09 Dec 2021 06:44 PM
Last Updated : 09 Dec 2021 06:44 PM
குன்னூரில் இருந்து சூலூர் விமானப்படைதளத்துக்கு ஆம்புலன்ஸ்களில் எடுத்துவரப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேரின் உடல்களுக்கு வழிநெடுகிலும் திரளான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நேற்று (டிச.8) உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு குன்னூர், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், ராணுவ உயர்அதிகாரிகள் இன்று மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் 13 அமரர் ஊர்திகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் போலீஸாரின் பாதுகாப்புடன் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் அமரர் ஊர்திகள் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு ராணுவ வீரரின் உடலை எடுத்து வந்த அமரர் ஊர்தி, முன்னே சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதி விபத்தில் சிக்கியது. உடனே மற்றொரு அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு, அதில் உடல் மாற்றப்பட்டது.
அதற்கு முன்பாக அமரர் ஊர்திகளின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனம் ஒன்று பர்லியாறு அருகே சாலையோரம் இருந்த பாறைமீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 காவலர்கள் காயமடைந்தனர். வழிநெடுகிலும் போக்குவரத்து சரி செய்யப்பட்டு, சூலூர் விமானப்படை தளத்துக்கு பிற்பகல் 3 மணியளவில் உடல்கள் வந்துசேர்ந்தன. சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்ட உடல்களுக்கு குன்னூர் முதல் சூலூர் வரை ஏரளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் திரண்டு அஞ்சலி செய்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம், வீரவணக்கம் என்ற கோஷங்களை எழுப்பினர். மேட்டுப்பாளையம், சூலூர் விமானப்படை தளம் முன்பு ஆம்புலன்ஸ்கள் மீது மலர்தூவி பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
பெண்கள் பலர் கண்ணீர்விட்டு அழுததை பார்க்க முடிந்தது. உடல்கள் சூலூர் விமானப்படைதளம் வந்தடைந்த பிறகு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், உயிரிழந்த 4 வீரர்களின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உடல்களை டெல்லி எடுத்துச் செல்வதற்காக இந்திய விமானப்படையின் 'சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ்' விமானம் தயார் நிலையில் இருந்து. அதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் ஏற்றப்பட்டபின், பிற்பகல் 3.40 மணியளவில் விமானம் டெல்லி புறப்பட்டுச் சென்றது. மற்றொரு விமானப்படை சிறப்பு விமானத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT