Last Updated : 09 Dec, 2021 06:06 PM

 

Published : 09 Dec 2021 06:06 PM
Last Updated : 09 Dec 2021 06:06 PM

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலர் குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு 

கோப்புப் படம்

மதுரை

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலர் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்து தர்ம பரிஷத் மேலாண்மை இயக்குநர் ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:

"தமிழகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமாக 38,615 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்குச் சொந்தமாக 4.22 ஏக்கர் நிலம், 22,600 கட்டிடங்கள் மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் உள்ளன. அறநிலையத்துறை கோயில்களில் கடந்த சில ஆண்டுகளாக அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. தற்போது அறங்காவலர் குழு நியமனப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆளும் கட்சியினர் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் பெயரளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கோயில் சொத்துகள், நகைகள் மற்றும் இந்து கலாச்சாரத்தைப் பாதுகாக்க முடியும்.

எனவே, தமிழகத்தில் அனைத்துக் கோயில்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலர் குழு அமைக்கவும், அந்தக் குழுவில் தலா ஒரு வழக்கறிஞர், சமூக சேவகர், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர், பெண் ஆகியோரை அறங்காவலர்களாக நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்."

இவ்வாறு மனுவில் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது விண்ணப்பப் பரிசீலனை நடைபெற்று வருகிறது. கோயில் தகுதி அடிப்படையில் 3 முதல 5 பேர் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர். அறங்காவலர் குழுவில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள், பெண்கள் கண்டிப்பாக இடம் பெறுவர் என வாதிட்டார்.

இதையடுத்து அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x