Published : 09 Dec 2021 11:15 AM
Last Updated : 09 Dec 2021 11:15 AM

பசுமைக் காடு வளர்ப்பு திட்டம்; மூன்றரை லட்சம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை: ராமதாஸ்

சென்னை

பசுமைக் காடு வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை வளர்த்து வைத்துள்ள சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகள் இன்று வரை பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ற் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

“காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தில் பசுமைக் காடு வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை வளர்த்து வைத்துள்ள சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகள் இன்று வரை பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. வேளாண் துறையினரின் அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

வனத்துறையினர் வளர்க்கும் மரக்கன்றுகளை வேளாண்துறையினர்தான் பெற்று, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பணியை வேளாண்துறையினர் செய்யாததால் மரக்கன்றுகளைத் தனியார் கூலித் தொழிலாளிகளை வைத்துப் பராமரிப்பது சிரமமாக இருப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

வனத்துறை வளர்த்து வைத்துள்ள வேங்கை, மகாகனி, பூவரசன் போன்ற மரக்கன்றுகள் விரைவாக வளர்ந்து நிழல் தரக் கூடியவை ஆகும். இவை அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை கொண்டவை. மரங்களை நட்டு வளர்க்க மக்கள் தயாராக இருக்கும் நிலையில், அவற்றை மக்களிடம் வழங்க வேளாண் துறை தாமதிப்பது முறையல்ல.

வனத்துறை வளர்த்து வைத்துள்ள மரக்கன்றுகளை வேளாண் துறை பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும். வேளாண் துறை முன்வராத நிலையில், வனத்துறை கேட்டுக்கொண்டால் அம்மரக்கன்றுகளைப் பொதுமக்களுக்கு வழங்க காஞ்சிபுரம் மாவட்ட பாமகவும், பசுமைத் தாயகம் அமைப்பும் தயாராக உள்ளன என்பதை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x