Published : 09 Dec 2021 03:08 AM
Last Updated : 09 Dec 2021 03:08 AM
அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்தகனமழையால், சென்னை மட்டுமல்லாமல், அதன் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், பாடிக்குப்பம் - ரயில்நகர் பகுதியில், மழையால் சேதமடைந்த கூவம் ஆற்றின் குறுக்கேஉள்ள பாடிக்குப்பம் - கோயம்பேடு பகுதிகளை இணைக்கும் தரைப்பாலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர், கனமழையால் பழுதடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கவும், நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 93 மீட்டர் நீளம்கொண்ட மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையை துரிதமாகமேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பிறகு, அம்பத்தூர், கருக்கு பிரதான சாலை, டி.டி.பி. காலனியில், மேம்பாலத்தின் மேல் நின்று கொரட்டூர் ஏரிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார். கருக்குப் பகுதியில் சென்னை - அரக்கோணம் ரயில்வேபாதையின், வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் கான்கிரீட் தரை தளத்துடன்கூடிய வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை ஆய்வு செய்து, அதை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், மழைக் காலங்களில் அம்பத்தூர் பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் அதை கொரட்டூர் ஏரிக்குகொண்டு செல்ல கூடுதலாக ஒருசிறு பாலம் அமைக்க பெருநகரசென்னை மாநகராட்சிக்கும், இருவெள்ள சீராக்கி அமைக்க பொதுப்பணித் துறைக்கும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT