Published : 09 Jun 2014 03:06 PM
Last Updated : 09 Jun 2014 03:06 PM
வாக்களித்த மக்களின் நலனை மத்திய அரசு உணர்ந்திருப்பதை குடியரசுத் தலைவரின் உரை காட்டுவதாக அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் ஜெய லலிதா பாராட்டியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். இந்த உரையைப் பாராட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் விரிவான, பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய உரையினை வரவேற்கிறேன். மத்திய அரசின் முக்கியம் வாய்ந்த கொள்கை முடிவுகள் பற்றி தெளிவாகவும் அழகாகவும், அவரது உரை கோடிட்டுக் காட்டியிருக்கிறது.
மேலும், சர்ச்சைக்குரிய மற்றும் பிரிவினை தொடர்பான விவகா ரங்கள் ஏதுமின்றி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப் பட்டிருப்பது சிறப்பு. இந்த அரசுக்கு தனிப் பெரும்பான்மையை அளித்த வாக்காளர்களின் எதிர்பார்ப் புகளை உணர்ந்திருப்பதை இது காட்டுகிறது.
வறுமை ஒழிப்பு
நாடு எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள், இதர முக்கியத் துறைகளின் எதிர்பார்ப்புகளும் உரையில் இடம்பெற்றுள்ளன. வறுமை ஒழிப்புக்கு அளிக்கப்பட் டிருக்கும் முக்கியத்துவத்தை வரவேற்கிறேன். ஊரக கட்டமைப்புப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி, கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்கும். வேளாண்துறையில் பொது மற்றும் தனியார் முதலீட்டை அதிகரிக்கும் திட்டமும் சிறப்பானது.
பாடத்திட்டக் கல்வி மற்றும் திறன் மேலாண்மை ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து முற்போக்கான சில திட்டங்கள் கல்வித்துறையில் வகுக்கப் பட்டுள்ளது. கல்வித்திட்டத்தில் விளையாட்டுக்கு அளித்திருக்கும் முக்கியத்துவம் மற்றும் தேசிய விளையாட்டு திறனாளர்களை அடையாளம் காணும் திட்டமும் வரவேற்கத்தக்கவையாகும்.
வீட்டுக்கு வீடு கழிப்பறை
மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டு விழாவையொட்டி, 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி செய்து தரும் திட்டமும் புதுமையானதாகும். தமிழகத்தில் 2015-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையை ஒழிக்கும் திட்டத்தை வகுத்துள்ளேன். இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான் மையினருக்கு அளிக்கப்பட்டி ருக்கும் முக்கியத்துவமும், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்ப தற்கான உத்தரவாதமும் பாராட்டுக் குரியவை. குறிப்பாக, ‘கூட்டுறவு கூட்டாட்சி’ முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருப்பது, கடந்த பத்தாண்டு காலமாக முழுவ துமாக மறைந்துவிட்ட கூட்டாட்சி முறைக்கு மீண்டும் உயிரூட்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி
சில மாநிலங்களுக்கு கூடுதல் நிதி அளிப்பதை நான் எதிர்க்காத போதும், அந்த மாநிலங்களுக்கு, குறிப்பாக இடம் சார்ந்த நிதிச் சலுகைகளை வழங்கும்போது அண்டை மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மாற்றங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கருத்தைப் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தொழில் மற்றும் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு குடியரசுத் தலைவர் உரை உரியமுறையில் முக்கியத்துவம் அளித்திருக்கிறது. இது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவிகரமாக அமையும். 100 புதிய நகரங்களை நிர்மாணிப்பது, 50 சுற்றுலா வளையங்களை ஏற்படுத்துவது, காவல்துறை நவீனமயமாக்கல் ஆகிய முக்கிய அறிவிப்புகளில் தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். தேசிய கடல்சார் வாரியம் அமைக்கப்படும் என்ற சீரிய முயற்சியில், கடல் எல்லைகளைக் கொண்ட மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
மொத்தத்தில், குடியரசுத் தலைவரின் உரை மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் உயர்ந்த லட்சியங்களை அடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்திய அரசுக்கு எமது அரசு சிறந்த ஒத்துழைப்பினை நல்கும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT