Last Updated : 08 Dec, 2021 06:24 PM

 

Published : 08 Dec 2021 06:24 PM
Last Updated : 08 Dec 2021 06:24 PM

சேலத்தில் ஆசிய நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு: அரிய வகையைச் சேர்ந்த இரண்டு பறவைகள் கண்டுபிடிப்பு

சென்னை

‘சேலத்தில் நடப்பாண்டு ஆசிய நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்புப் பணியின்போது, இரண்டு அரிய வகைப் பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என சேலம் பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சர்வதேசப் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஆசிய நீர்நிலைப் பறவைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடந்து வருகிறது. சேலம் பறவையியல் கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 265 நீர்நிலைகளில் பறவை இனங்கள் கணக்கெடுத்துப் பதிவு செய்யப்பட்டதில், இரண்டு அரிய வகைப் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து சேலம் பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் கூறியதாவது:

”ஆசிய நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள பறவை இனங்களின் வகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம். கடந்த 2020-ம் ஆண்டு 52 நீர்நிலைகளில் 121 பறவை இனங்களும், நடப்பாண்டு 265 நீர்நிலைகளில் 168 பறவையினங்களும், மாவட்டம் முழுவதும் 25,479 பறவைகளும் பதிவு செய்துள்ளோம். இப்பணியில் சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த 22 பேர் பங்கேற்று, ஒவ்வொரு நீர்நிலையிலும் வந்து செல்லும் பறவைகளின் புகைப்படம் எடுத்தும், வீடியோ பதிவு செய்து ஆவணப்படுத்தி வருகிறோம்.

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு ஆசிய நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பின்போது, இரண்டு அரிய வகைப் பறவைகள் கண்டறியப்பட்டன. இதில் இமயமலை அடிவாரத்தில் காணக்கூடிய பெரிய கருப்பு உழவாரன், தென் தமிழகத்தில் கணக்கூடிய கல்கவுதாரி பறவைகள் சேலத்தில் முதல் முறையாக இருப்பது தெரியவந்துள்ளது. கல்கவுதாரி பறவைகள் அகண்ட புதர்க் காடுகள், திறந்தவெளிப் புல்வெளிகள், கற்கள் நிரம்பிய பகுதிகளில் காணப்படும்.

கற்களின் நிறத்தை ஒத்து இருக்கும் கல்கவுதாரியானது, எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவான தோற்றத்தை இயற்கையாகப் பெற்றுள்ளது. கற்களுக்கு இடையே தரையில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கக்கூடியது. இவற்றுக்குக் கூடு கட்டத் தெரியாது. இரைகொல்லி விலங்குகளும், கொன்னுண்ணி பறவைகளிடம் இருந்து மறைந்து வாழக் கற்கள் நிறைந்த பகுதிகளையே பெரும்பாலும் இருப்பிடமாகக் கொண்டிருக்கும். கல்கவுதாரி 33 செ.மீ. வரை வளரக்கூடியது. சேலத்தில், முதல் முறையாக கெங்கவல்லி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கல்கவுதாரி பறவை கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல, பெரிய கருப்பு உழவாரன் பறவையானது இமயமலை அடிவாரத்தில் காணக்கூடிய மிகச் சிறிய பறவையாகும். சேலத்தில் முதல் முறையாக இப்பறவையானது ஓமலூர் நீர்நிலைப் பகுதிகளில் கண்டறியப்பட்டு, ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் அரிய வகையான பெரிய கருப்பு உழவாரன் பறவையானது 20 செ.மீ. வரை வளரக்கூடியது. தட்பவெப்ப நிலை மற்றும் உணவுத் தேவைக்காக பெரிய கருப்பு உழவாரன் பறவையானது சேலத்துக்கு வலசை வந்துள்ளது.

இப்பறவை முதுகில் வெள்ளை நிறத்துடனும், வால் பிறவு பட்டுக் காணப்படும். பூச்சிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பெரிய கருப்பு உழவாரன் பறவையானது, விவசாயிகளின் உற்ற தோழன் என்று கூறலாம். வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைப் பெரிய கருப்பு உழவாரன் உணவாகக் கொண்டுள்ளது. இதனால், பூச்சிகளால் பயிர்கள் பல்வேறு நோய்த் தாக்கத்தில் இருந்து காக்கும் பணியை பெரிய கருப்பு உழவாரன் பறவை இனங்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்தில் வரும் 2022-ம் ஆண்டு ஆசிய நீர்ப் பறவைகள் கணக்கெடுப்புப் பணியின் போது, 300 நீர்நிலைகளில் பறவையினங்களைக் கண்டறிந்து, ஆவணப்படுத்திட முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பறவையினங்கள் வாழத் தேவையான சூழலை உருவாக்குவதும், அவற்றின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தல், நீர்நிலைகளை மேம்படுத்துதல், பல்லுயிர்ப் பெருக்கத்தை முன்னெடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட முக்கியக் கருத்துருக்களை அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்து இயற்கை வாழ்விட அபிவிருத்திப் பணியை மேற்கொள்ளவுள்ளோம்".

இவ்வாறு சேலம் பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x