Published : 08 Dec 2021 02:37 PM
Last Updated : 08 Dec 2021 02:37 PM
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து கோயில்களிலும் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
"முதல்வர் ஸ்டாலின் இன்று (8.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோயிலில் திருமணம் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி மணமகன் மற்றும் மணமகளுக்கு, திருமணம் செய்திட கட்டணம் இல்லை என்ற உத்தரவினை வழங்கினார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மணமக்களின் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும், திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கபடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக, சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்த சாரதி கோயிலில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி மணமக்களான சுரேஷ்குமார்-மோனிஷா ஆகியோரது திருமணத்திற்கு கட்டணம் இல்லா உத்தரவினை முதல்வர் வழங்கினார். மேலும், மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களுடன் பரிசு பொருட்களையும் வழங்கி, வாழ்த்தினார்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம், இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் கட்டணமின்றி திருமணம் நடத்தப்படும்.
இந்த நிகழ்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், இ.ஆ.ப., இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், ஆகியோர் உடனிருந்தனர்."
இவ்வாறு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT