Published : 08 Dec 2021 11:09 AM
Last Updated : 08 Dec 2021 11:09 AM
அரசுப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்க வேண்டும். அதேபோல், நடத்துநர்கள் பேருந்தில் போதிய இடவசதியை ஏற்படுத்திக் கொடுத்து பயணிகள் படிக்கட்டில் நிற்காதவாறு உறுதி செய்ய வேண்டும்.
தாங்கள் பேருந்துகளை இயக்கும் தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்தத் தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்துப் போக்குவரத்துக் கிளை மேலாளர்களுக்கும் போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அண்மைக் காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரயிலில், பேருந்துகளில் தொங்கியடி பயணித்து சாகசம் செய்வதாக நினைத்து ஆபத்தாக பயணிப்பது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் தான், அரசுப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த அறிவிப்பு பணியில் இருக்கும் ஓட்டுநர், நடத்துநருக்கு அழுத்தத்தைத் தரும். மாறாக கூட்ட நெரிசல் அதிகமுள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT