Published : 08 Dec 2021 10:55 AM
Last Updated : 08 Dec 2021 10:55 AM

இந்தித் திணிப்பு; தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம்: அன்புமணி கண்டனம்

கோப்புப் படம்

சென்னை

அரசின் விதிமுறையை மீறி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்தியைத் திணிக்கக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

"திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க Azadi Ka Amrit Mahotsav என்ற இந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்!

விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை ’’சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” எனத் தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது!

அழகான தமிழ் முழக்கத்தைத் தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித் திணிப்புதான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?

அனைத்து தமிழக அரசு நிறுவனங்களும் மாநில அரசின் ஆணையை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆணையை மதிக்காமல் இந்தி முழக்கத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!"

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x