Last Updated : 08 Dec, 2021 09:19 AM

1  

Published : 08 Dec 2021 09:19 AM
Last Updated : 08 Dec 2021 09:19 AM

குழந்தை பிடிக்காததால் வீட்டிலேயே சுயமாக பிரசவம் பார்த்த தாய்; துடிதுடித்து இறந்த குழந்தை: போலீஸார் வழக்குப் பதிவு

கோவையில் பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே, தாய் சுயமாக பிரசவம் பார்த்ததால், குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக தாய் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை கெம்பட்டி காலனியிலுள்ள, உப்பு மண்டி 7-வது வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புண்ணியவதி(32). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 6 வயதான மூத்த மகன் உட்பட இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், புண்ணியவதி கடந்த மார்ச் மாதம் மீண்டும் கர்ப்பமானார். ஆனால், அவருக்கு தான் கர்ப்பமானது பிடிக்கவில்லை. ஆனால், அதை வெளிக்காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான புண்ணியவதி நேற்று முன் தினம் (6-ம் தேதி) வீட்டில் இருந்த போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், புண்ணியவதி மருத்துவமனைக்கு வர மறுத்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்து விட்டார். தொடர்ந்து குடும்பத்தினர் வலியுறுத்தியதால், அவர்களை வீட்டுக்கு வெளியே அனுப்பி, கதவை உள்பக்கமாக புண்ணியவதி தாழிட்டுக் கொண்டார்.

தொப்புள்கொடி அறுப்பு:

சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதும் அவர் மருத்துவமனைக்கு செல்ல சம்மதிக்கவில்லை. மாறாக தொப்புள் கொடியை சரியாக துண்டிக்காமல், குழந்தையின் வயிற்றுடன் சேர்த்து துண்டித்துள்ளார். இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது. பின்னர், நிலைமை விபரீதமாவதை உணர்ந்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி, குழந்தை நேற்று (7-ம் தேதி) மாலை உயிரிழந்துள்ளது.

இத்தகவலை அறிந்த, கோவை மாவட்ட குழந்தைகள் நலச்சங்கத்தின் அலுவலர் கார்த்திக் பிரபு, கடைவீதி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி கூறும்போது, ‘‘தாய் புண்ணியவதிக்கு இக்குழந்தை பிறப்பது பிடிக்கவில்லை. எனவே, குழந்தை இறந்து பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடனே இறக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், குடும்பத்தினர் வலியுறுத்தியும் கேட்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 315 (குழந்தை உயிரிழந்து பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடனே உயிரிழக்க வேண்டும்) என்ற பிரிவின் கீழ் புண்ணியவதி மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. பிரசவத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x