Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM

எல்லை வரையறை பிரச்சினையால் தாம்பரம் காவல் ஆணையரகம் தொடங்குவதில் இழுபறி நீடிப்பு

தாம்பரம்

சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை இரண்டாகப் பிரித்து, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய காவல் ஆணையரகம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், நிர்வாகம் (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் எம்.ரவி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து எல்லையும் வரையறை செய்யப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து 20 காவல் நிலையங்களைப் பிரித்து எல்லை வரையறை செய்யப்பட்டது.

அதன்படி சென்னை மாநகர ஆணையரகத்தின் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பள்ளிக்கரணை, சேலையூர், சிட்லப்பாக்கம், பீர்க்கன்கரணை, குன்றத்தூர், கானாத்தூர், சங்கர்நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர். செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம், ஓட்டேரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோமங்கலம், மணிமங்கலம் ஆகியவை புதிய ஆணையரகத்தில் இடம்பெறுகின்றன.

பின்னர் புதிய ஆணையர் அலுவலகம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், இன்னும் இடம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் புதிய ஆணையரகம் தொடங்கப்படுவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் மற்றும் தங்களுக்கு வேண்டிய காவல் அதிகாரிகளை நியமனம் செய்வதில் உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினை எழுந்துள்ளதால், ஆணையரகம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தாம்பரம் புதிய காவல் ஆணையரகத்துக்கு எல்லையும் முறையாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், முக்கியப் பகுதியான சென்னை விமான நிலையம் தாம்பரம் ஆணையரக கட்டுப்பாட்டின்கீழ் வரவில்லை. சென்னை விமான நிலையம் செங்கல்பட்டில் சில பகுதிகள்மற்றும் காஞ்சி மாவட்டத்தின் சில பகுதிகள் வேண்டும் என புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ரவி கேட்டு வருவதாகத் தெரிகிறது.

ஆனால், அந்தப் பகுதிகளை தர முடியாது என காவல் உயரதிகாரிகள் பிடிவாதம் பிடித்துவருகின்றனர். இதனால் உயர் காவல் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் ஆணையரகம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் முதல்வர் வரை சென்றது. முதல்வர் யாருக்கும் பிரச்சினை இல்லாமல் பஞ்சாயத்தை முடிக்கும்படி டிஜிபிக்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வுகண்டு, விரைவில் தாம்பரம் ஆணையரகம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x