Published : 24 Mar 2016 11:40 AM
Last Updated : 24 Mar 2016 11:40 AM

காசநோயால் அதிகம் பாதிக்கப்படும் நாடு இந்தியா: ஆண்டுக்கு 2.70 லட்சம் பேர் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

இன்று (மார்ச் 24-ம் தேதி) உலக காசநோய் தினம்

இன்று காசநோய் தினம் அனுசரிக் கப்படுகிறது. உலகிலேயே காச நோய் பாதிப்பு அதிகம் கொண்ட இந்தியாவில் ஆண்டுதோறும் இந்நோய் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் இறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காசநோய் மனிதனை மிகவும் விரைவாகத் தாக்கி உயிரை பறித்து விடுகிறது. அதனால், ஆண்டு தோறும் நோயாளிகளில் பலரும் இறக்கிறார்கள்.

உலகம் முழுவதும் நம் நாட்டின் காசநோய் தடுப்பு திட்ட நடை முறைகளை மாதிரியாக ஏற்று தீவிரமாக பணிகளை செய்து வந்தா லும், அதிகமான காசநோய் பாதிப்பு களைக் கொண்ட நாடுகளிலேயே இந்தியாவும் முக்கியமான இடத்தில் இருப்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

இதுகுறித்து அமெரிக்காவின் நூரிஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து காசநோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊட்டச் சத்து பற்றி ஆய்வு மேற் கொண்டுள்ள மீரா பவுண்டேஷன் இயக்குநர் மதுரையைச் சேர்ந்த ராஜா முகமது கூறியதாவது:

தொடர்ந்து இருமல், உடல் எடை குறைதல், மாலைநேரக் காய்ச்சல், பசியின்மை, சளியில் ரத்தம் போன்றவை காசநோய் அறிகுறிகளாக இருக்கலாம் என்ற தகவல்கள் அரசு மற்றும் அமைப்புகள், ஊடகங்கள் வழியாக கிடைக்கப்பெற்றாலும், மேற்கண்ட அறிகுறிகள் உள்ள வர்கள் சிகிச்சைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். காசநோய் உள்ள வர்களை சமூகம் ஒதுக்கிப் பார்க்கும் நிலை இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

இதனாலேயே நிறைய நோயாளிகள் சிகிச்சை பெற தயங்கி நோய் முற்றிய நிலைக்கு வந்த பின்பு உயிரை இழக்கின்றார்கள். காசநோயானது காற்று மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. இதில் வயது வித்தி யாசம் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் பரவுகிறது. இந்த விஷயத்தை இன்னும் தீவிரமாக மக்களிடம் எடுத்துச் சொல்லும்படியான திட்ட உத்திகள் நிறைய தேவைப்படுகின்றன. காச நோயைக் குணமாக்குவதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருமே தெளிவற்ற நிலையில்தான் இன்னும் இருக்கிறார்கள்.

நோயாளிகள் 6 மாதங்கள் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

காசநோய் வராமல் தடுக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கை கள் இல்லை. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு காச நோய் கிருமிகள் தாக்கப்பட்ட நிலையில் இருக்கும். ஆனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் நபர்களைத்தான் காசநோயாளியாக மாற்றும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகையிலை மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு காசநோய்த் தொற்று மிக எளிதான பாதிப்புகளை உண்டாக்கும். எச்ஐவி தொற்றுள்ள நபர்கள் மிக வும் எதிர்ப்பு சக்தி குறைவானவர் களாக இருப்பார்கள்.

எனவே, 3 எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களின் இறப்பில் 1 நபர் காசநோயினால் பாதிக்கப்பட்டவராகவும் இருக் கிறார். இந்தியாவில் ஓர் ஆண்டில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் காசநோயால் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

காணாமல் போகும் 30 லட்சம் நோயாளிகள்

ராஜா முகமது கூறும்போது, ‘‘உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் காசநோயாளிகளாகக் கண்டறியப்படுகின்றனர். ஆனால், தற்போது 1 லட்சம் பேருக்கு 211 நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 10 லட்சம் பேர் காசநோய் பரிசோதனைக்கு வராமலேயே இருக்கின்றனர்.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோய் சிகிச்சைக்கு வராமலேயே இருக்கிறார்கள். இவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். சிகிச்சை மேற்கொள்ளாத நோயாளிகள் ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்கு காசநோயை பரப்புகின்றனர். சிகிச்சைக்கு வராதவர்களை இலக்கு வைத்து பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x