Last Updated : 07 Dec, 2021 06:25 PM

1  

Published : 07 Dec 2021 06:25 PM
Last Updated : 07 Dec 2021 06:25 PM

மீன் நாற்றம் வீசியதாக பேருந்தில் இருந்து இறங்கிவிடப்பட்ட மூதாட்டி: குமரி போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை

குளச்சல் பேரூந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கி விடப்பட்ட மீனவ மூதாட்டி செல்வம் கதறிய படம்

நாகர்கோவில்

குமரியில் மீன்நாற்றம் வீசுவதாக மகளிருக்கான இலவச பேருந்தில் இருந்து நடத்துனரால் மீன்விற்கும் மூதாட்டியை இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(65). தலைச்சுமையாக மீன்களை கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து இரவில் மகளிருக்கான இலவச அரசு பேரூந்தில் ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதைப்போல் நேற்று இரவு மீன்களை விற்றுவிட்டு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் மகளிருக்கான அரசு பேரூந்தில் செல்வம் ஏறியுள்ளார். அப்போது அந்த பேருந்து நடத்துனர் செல்வத்தின் மீது மீன்நாற்றம் வீசுவதாக சொல்லி பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, இரவு நேரத்தில் ஊர் திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டி செல்வம், குளச்சல் பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு வந்து நின்று அழுதவாறு கூச்சலிட்டார். வயதான தன்னை பஸ்சில் இருந்து இறக்கி விட்டுட்டாங்க... மீன் நாற்றம் அடிப்பதாக சொல்றாங்க. இனி வாணியக்குடி வரை நான் நடந்து தான் போணுமா? என ஆதங்கத்துடன் பயணிகளிடம் புலம்பினார். மேலும் அழுதவாறு பேரூந்து நிலைய சுவரிலே சாய்ந்தவாறு நின்றார்.

இதை அங்கு நின்ற பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது, மூதாட்டி செல்வம் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக கதறி அழும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவ மூதாட்டி இறக்கிவிடப்பட்ட சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் அரசு போக்குவரத்து கழகம் மீது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து குமரி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x